என் மலர்
கடலூர்
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் ஸ்டார் சவுகத் அலி தலைமையில் 52 பேர் கார், வேன்களில் கடலூர் மத்திய சிறைச்சாலை அருகே வந்தனர்.
பின்னர், தமிழக சிறைகளில் கடந்த 19 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள முஸ்லிம் கைதிகளை சிறை மாற்றம் செய்து அவர்களை சித்ரவதை செய்வதை கண்டித்தும், முஸ்லிம் கைதிகளுக்கு பரோல் வழங்க வேண்டும், மதுரை ராஜா உசேனை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் சிறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் சிறைச்சாலையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது பாதுகாப்புக்காக நின்ற துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து ஸ்டார் சவுகத் அலி உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கடலூர்:
ஆண்டுதோறும் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பொதுமக்கள் கையில் குடை பிடித்துக்கொண்டும், வாகன ஓட்டிகள் தொப்பி மற்றும் துணியால் முகத்தை போர்த்தியபடியும் சென்றனர். மேலும் கடுமையான அனல் காற்று வீசியது.
இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததோடு, இயல்பு வாழ்க்கை பாதித்தது.மழை பெய்தால்தான் வெப்பத்தின் தாக்கம் தணியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் கடந்த 15ந் தேதி இரவு முதல் மழை தொடங்கி சுமார் 4 நாட்கள் பெய்தது.
இதனால் கடுமையான வெப்ப காற்று மறைந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து பெரும் மூச்சு விட்டனர். பின்னர் கடந்த சில நாட்களாக 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை கடும் வெயில் கடலூர் மாவட்டத்தில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மீண்டும் கடும் வெயிலால் துன்பம் அடைந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் இடித்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் மற்றும் நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம், காரா மணிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு லேசான மழை சிறிது நேரம் பெய்தது. ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
கடலூர் குமளங்குளம், கொடுக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
அந்த பகுதிகளில் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்த னர்.
சூறாவளி காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 14–ம் தேதி வேலை நிறுத்த போராட்ட நோட்டீஸ் அளித்தது.
இது தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் 20–ந் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.
கூட்டத்தில் என்.எல். சி.நிர்வாகம் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று சென்னை சாஸ்திரி பவனில் மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி கமிஷனர் அண்ணாதுரை முன்னிலையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் நிர்வாகம் தரப்பில் மனிதவள மேம்பாடு கூடுதல் பொதுச் செயலாளர் திருகுமாரும், ஒப்பந்த தொழிளாலர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சேகர் நிருபரிடம் கூறியதாவது:–
என்.எல்.சி.நிர்வாகத்தில் பிடிவாதத்தால் பேச்சுவார்தை தோல்வி அடைந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தக்கட்ட பேச்சுவார்தை தொழிலாளர் கமிஷனர் முன்னிலையில் நடத்தப்படும். மேலும் நாளை (29–ந்தேதி) நெய்வேலியில் தொழிலாளர் சங்கத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43) முந்திரி வியாபாரி. இவரது மனைவி ரோகினி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சக்திவேலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் அவர் நெருங்கி பழகி வந்தார். இது ரோகினிக்கு தெரிய வந்தது. அவர் கணவனை கண்டித்தார். ஆனால் சக்திவேல் கேட்கவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துவந்தார்.
இதனால் ரோகினிக்கு சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நடுக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவிற்கு சக்திவேல் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார்.
கோவில் திருவிழாவையொட்டி நள்ளிரவில் நாடகம் நடைபெற்றது. அதைப்பார்த்துவிட்டு வருமாறு தன் பிள்ளை களை சக்திவேல் அனுப்பி வைத்தார். அவர்களும் சென்று விட்டனர். ரோகினி வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும் சக்திவேலுக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கணவனிடம் ரோகினி கூறினார்.
ஆனால் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டிக்கமுடியாது என்று சக்திவேல் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது . உடனே சக்திவேல் ஆத்திரமடைந்து இரும்பு கம்பி எடுத்து ரோகினியை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த ரோகினி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்று விட்டோமே என்று மனம் வருந்தினார். இனி என்ன செய்வது என்று நினைத்தார். வீட்டின் அருகில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு சக்திவேல் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் திருவிழாவில் நாடகம் பார்க்க சென்ற சக்திவேலின் பிள்ளைகள் அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள். வீட்டில் ரோகினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தாயின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். தந்தை சக்திவேல் எங்கு சென்றார் என்று பல இடங்களில் தேடினார்கள். இன்று காலை வீட்டின் அருகே உள்ள முந்திரி மரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கண்ணீர் விட்டனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி.இளங்கோவன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சக்திவேல் மற்றும் ரோகினியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாய்–தந்தையை இழந்த பிள்ளைகள் கதறி துடித்தது. பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள மணக்கொல்லையைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவரது மகள் வினிதா (வயது 22). இவர் தொழுதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
வினிதா தொழுதூரில் படிக்கும்போது தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார். அப்போது சந்தோஷ்குமார் தொழுதூருக்கு சென்று வினிதாவை அடிக்கடி பார்த்துவிட்டு வருவது வழக்கம். அப்போது அவர் கொண்டு சென்ற குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி வினிதாவை குடிக்க வைத்தார். குளிர்பானத்தை குடித்த வினிதாவிற்கு மயக்கம் ஏற்பட்டது.
அப்போது சந்தோஷ் குமார் வினிதாவை கற்பழித்து உள்ளார். மயக்கம் தெளிந்த வினிதா அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக வினிதா சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்தார். அதற்கு வினிதாவை திருமணம் செய்து கொள்வதாக சந்தோஷ்குமார் ஆசை வார்த்தை கூறினார்.
அதன்பின்னர் இருவரும் பல இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தனர்.
இந்தநிலையில் சந்தோஷ் குமாருக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதாக வினிதாவிற்கு தெரியவந்தது. சம்பவத்தன்று வினிதா சந்தோஷ்குமாருக்கு செல்போனில் கேட்டபோது அவரை ஆபாசமாக சந்தோஷ்குமார் திட்டினார். இதுப்பற்றி வினிதா பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கேட்பதற்காக வினிதா அவரது பெற்றோருடன் சந்தோஷ் குமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது சந்தோஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் ரவி, அவரது மனைவி சிவநந்தினி, வீரப்பன், அவரது மனைவி கலைச்செல்வி, போத்ராஜா, அவரது மனைவி சந்திரா ஆகிய 7 பேரும் சேர்ந்து வினிதாவையும் அவரது பெற்றோரையும் சரமாரி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வினிதா விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து ரவி, கலைச்செல்வியை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.
மணிமுக்தாறு பாசன விவசாயிகள் நலசங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமையில் பரவளூரைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில் குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பரவளூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து தொரவளூரில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர்.
தொரவளூர் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு குடித்து விட்டு வரும் குடிமகன்களால் பள்ளிச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு டாஸ்மாக் கடையை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்டகாலமாக எங்கள் கிராமத்திற்கு விருத்தாசலத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட வில்லை. இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சிர் செந்தில்குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. மேலும் அந்த காடுகள் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. அதில் மக்காச்சோளம், நெல்பயிர்கள் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த காட்டுபன்றிகள் விவசாயிகள் பயிரிட்டிருந்த தானியங்களை தின்று நாசம் செய்தன. இன்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் நெற்பயிர்கள் காட்டுபன்றிகளால் நாசம் அடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் காட்டுபன்றிகளை விவசாய நிலப்பகுதிக்கு வராமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரர் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் ரேவதி(வயது 18) 10–வகுப்பு வரை படித்து உள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் என்பவருக்கும் காதல் இருந்தது.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மகளை காணாததால் வடிவேலு நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்த காதல் ஜோடி கோவிந்தராஜ்–ரேவதி பாதுகாப்பு கேட்டு நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து காதல் ஜோடிகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 24) இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்– மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு சித்ரா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவரது உடலை சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர். தகவல் அறிந்து சித்ராவின் தந்தை பழனிவேல் அங்கு விரைந்து சென்றார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பழனிவேல் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சுடுகாட்டிற்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. பிரேதபரி சோதனையில் சித்ரா எப்படி இறந்தார்? என்ற நிலவரம் தெரிய வரும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தின் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளிக் கவுண்டர் ஆகிய வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று செயல்பட்ட மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நடவடிக்கை மூலம் நரிக்குறவர் உள்ளிட்ட சமூகத்தினர் கல்வியிலும் வாழ்க்கையிலும் மேம்படைய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அந்த இன மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல் தமிழக மீனவர்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தமிழகத்தின் நெடுநாளைய கோரிக்கை. இதையும் மத்திய அரசு பரிசீலித்து மீனவர்களையும் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசும் முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கடலூரில் முக்கிய பகுதிகளில் செல்லும் கழிவுநீர் புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், பீச்ரோடு வழியாக வந்து கடலில் கலக்கிறது. இந்த கழிவுநீர் நகரில் இருந்து கடலுக்கு செல்லும் கால்வாய் அகலமாக இருந்தது.
அந்த கால்வாயில் வியாபாரிகள் சிலர் கடைகளை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் கடைகள் இருக்கும் பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய முடிவதில்லை. அந்த இடங்களில் கழிவுநீர் தேங்கி விடுகிறது.
துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கொசு தொல்லைகளும் அதிகரித்து உள்ளது. எனவே இந்த கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். நகராட்சி கமிஷனர் முருகேசன் உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர்.சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் திருப்பதி மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம் ஆகிய பகுதிகளில் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தொடங்கினர்.
இதில் கோபம் அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் கடைகளை அகற்ற கூடாது என்று கூறினர். ஆனால் கால்வாயை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் கடைகளை அகற்ற வேண்டும் என்று அவர்களிடம் அதிகாரிகள் கூறினர்.
இதனால் வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர். அதன்பின்னர் வியாரிகள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கடைகளில் உள்ள பொருட்களை நீங்களே எடுத்து செல்லுங்கள் அதன்பின்னர் நாங்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கொள்கிறோம் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் வியாபாரிகள் பொருட்களை எடுத்து சென்றனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடலூர் கம்மியம்பேட்டை பாலம் அருகில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் மீன்கள் இறந்து கிடப்பது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது கம்மியம் பேட்டை தடுப்பணையில் நீர் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியது கண்டறியப்பட்டது. மேலும் சமீபத்தில் பொழிந்த கனமழையின் காரணமாக கெடிலம் ஆற்றின் மேல் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலந்ததனாலும், தடுப்பணையில் உள்ள நீர் கலங்கியதாலும் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், கெடிலம் ஆற்றின் அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து எவ்வித கழிவுநீரும் ஆற்றில் கலக்காதவாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






