என் மலர்
கடலூர்
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மேல புதுப்பேட்டை பகுதியில் நடந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
திருமாவளவனை வரவேற்கும் வகையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ரோட்டு பொட்டவெலி பகுதியில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தினர். இன்று காலை இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் சிதம்பரம்-குறிஞ்சிப்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), மீனவர். நேற்று நள்ளிரவு இவர் அதே பகுதியை சேர்ந்த 3 மீனவர்களுடன் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
சிறிது தூரத்தில் படகு சென்றுகொண்டிருந்தபோது முகத்துவாரத்தில் உள்ள சிமெண்டு கட்டையில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. ஆறுமுகம் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புதுக்குப்பம் கடற்கரை யோரம் ஆறுமுகத்தின் உடல் ஒதுங்கியது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கடலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், மீனவர்கள், தலித் மக்கள் ஆகியோர் மீது போலீசார் பதிவு செய்துள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.
போலீஸ் தடியடியின் போது காயமடைந்தவர்களுக்கும், பொருட்சேதம் ஏற்பட்டவர்களுக்கும் தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் தடியடி நடத்த காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போலீஸ் தடியடி குறித்து தற்போது பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும். தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வருகிற 7-ந்தேதி எனது தலைமையில் ஊர்வலம் நடைபெறும். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கோட்டையை சென்றடையும்.
ஊர்வலத்தில் 150 அமைப்பினர் ஒன்றிணைந்து கருப்பு கொடி ஏந்தி கலந்து கொள்வார்கள். ஊர்வலத்தின் முடிவில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை மனு வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர் ஆனந்த், மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன், நகர தலைவர் ராஜேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை ரெயிலடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் திருவேங்கடம்(வயது 16). சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் திருவேங்கடம் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை திருவேங்கடம் வல்லபம்படுகையில் இருந்து சிதம்பரத்துக்கு அரசு பஸ்சில் நண்பர்களுடன் புறப்பட்டார்.
சிதம்பரம் மந்தக்கரை பஸ்நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது திருவேங்கடம் திடீரென்று பஸ்சில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை நண்பர்கள் ஆட்டோவில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு திருவேங்கடத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மாணவன் திருவேங்கடம் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் வினோத் (வயது 35). இவர் கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நர்மதாவை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறினர். அதன்பின்னர் மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவியை போலீஸ்காரர் வினோத் கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாணவியின் தாயார் புதுநகர் போலீசில் புகார் செய்தார். மாணவியை கடத்தியதாக போலீஸ்காரர் வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அனுமதியில்லாமல் விடுமுறையில் இருப்பதாலும், போலீஸ்காரர் வினோத் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி போலீஸ்காரர் வினோத்தை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தையும் போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கீழக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 57). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 8-ம் எண் அறையில் இருந்தார்.
இன்று காலை சிறை அதிகாரிகள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராஜமாணிக்கம் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கடலூர் சிறை அதிகாரிகளும், முதுநகர் போலீசாரும் விசாரணை நடத்தினர்.
அப்போது கைதி ராஜ மாணிக்கம் அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை.
சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் சிறையில் அடிக்கடி செல்போன், சிம்கார்டு, கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்படுவதும், கைதிகள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
உயர் அதிகாரிகள் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து கைதிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரில் தனியாருக்குச் சொந்தமான பால்பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென்று வாயு (அம்மோனியா) கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள தனியார் பள்ளிக் கூட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். தொழிற்சாலை ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடினர். அந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருக்களுக்கு சென்றனர்.
தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினர்.

தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்தது குறித்து விருத்தாசலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அம்மோனியா வாயு பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினர். பின்னர் வாயு வெளியேறுவதை முற்றிலுமாக நிறுத்தினர்.
தகவல் அறிந்ததும் விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் ஆய்வு செய்த போது தொழிற்சாலையில் பயன்டுத்தப்படும் மின் சாதனப் பொருட்கள் கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி பழமையான நிலையில் இருப்பதும், அதன் காரணமாகவே வாயு கசிவு ஏற்பட்டதும் உறுதியானது.
இதைத்தொடர்ந்து பால் பண்ணையின் உரிமம் மற்றும் அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. பின்னர் பால்பண்ணை தொடர்ந்து இயங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
தொழிற்சாலை நிர்வாகத்தினரும் ஆலையை மூட ஒப்புக்கொண்டனர். பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகளை கண்டித்து கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் அஸ்கர் அலி, திராவிடமணி, தொகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, வெற்றிச் செல்வன், ஆதித்தகரிகாலன், மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நகர செயலாளர் செந்தில் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் சிந்தனை செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், கடலூர் பாரளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் பேசினர்.
நிர்வாகிகள் ஆதி குடியரசு, காத்தவராயன், பிரதீப், முருகன், பன்னீர்செல்வம், கிட்டு, குருமூர்த்தி, கோபாலன், இமானுவேல், இளம்பிறை, இடிமுரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் முதுநகர் செயலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.
பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிதம்பரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் மூண்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் தூண்டுதலே காரணம் ஆகும்.
கடந்த 1962-ல் தனி திராவிடம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. அதற்கு திராவிட கட்சிகள் துணை நின்றன. அதேபோல் தற்போது தனி அமைப்புகளையும், மாணவ அமைப்புகளையும் சீமான் தூண்டிவிட்டு தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கெயில்குழாய் திட்டத்துக்கு முன்நின்று தமிழகத்தில் அனுமதி வழங்கியது தி.மு.க.ஆட்சியில் தான்.
இந்த திட்டத்தை மோடி அரசு தடை செய்தது. கடந்த காலங்களில் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்து எல்லாம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான். ஆனால் தற்போது மோடி அரசு மீது பழி போடுகிறார்கள்.
தமிழக நலனில் அக்கறை உள்ள ஆட்சியாகத்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் விவகாரத்திலும் தொலைநோக்கு சிந்தனையுடன் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 4 ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவிகளுக்கு தங்கி படிக்க வசதியாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு மாணவிகள் விடுதி உள்ளது.
இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை எனவும், அரசின் சாப்பாட்டுடன் வழங்கப்படும் இலவச முட்டை மற்றும் பயிறு வகைகளும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக மாணவிகள் பல முறை விடுதி காப்பாளர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு தரமானதாக இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் காலை உணவை சாப்பிடாமல் விடுதி முன்பு ஒன்று கூடினார்கள். அவர்கள் திடீரென்று கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது மாணவிகள் எங்களை விடுதியில் சமையல் செய்பவர் காய்கறி நறுக்கி கொடுப்பது உள்பட பல்வேறு வேலைகளில் எங்களை தினமும் ஈடுபட சொல்கிறார். அந்த வேலைகளை நாங்கள் செய்யவில்லை என்றால் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான உணவை விடுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் முட்டை, பயிறு வகைகள் சரிவர கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல புகார்களை தெரிவித்தனர்.
இதனை கேட்ட தாசில்தார், இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதை கேட்ட மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் தாலுகா அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார். சிகிச்சைக்காக புதுவையில் உள்ள மகாத்மா காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர்.
எனவே அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வானதி ராயபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின்னரே இருவருக்கும் பன்றிக்காய்ச்சல் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர் கூறினார்.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பண்ருட்டிக்கு காரில் வந்தார். அப்போது அந்த வழியாக மீன்பாடி வண்டி ஒன்று வந்தது. அதில் அதிக அளவில் இரும்பு தகடுகள் ஏற்றப்பட்டிருந்தன. எனவே அந்த வண்டியை டிராபிக் ராமசாமி நிறுத்தினார்.
அதிகமாக பாரம் ஏற்றி வந்தது ஏன்? என்று வண்டி ஓட்டிவந்தவரிடம் கேட்டார். பின்னர் பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு மீன்பாடி வண்டியை கொண்டு சென்றார். இதனை அறிந்த டிராபிக் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்களிடம் டிராபிக் ராமசாமி விதிமுறைகளை மீறிய மீன்பாடி வண்டி மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்பாடி வண்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
விழுப்புரம் அருகே கோலியனூர் ரவுண்டானாவில் விதிகளை மீறி டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது குறித்து புகார் செய்துள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு தொடர உள்ளேன்.
இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட மோட்டாருடன் இயங்கும் மீன்பாடி வண்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மீது வழக்கு தொடர உள்ளேன்.
ஏப்ரல் மாதத்திற்குள் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்காக கருப்பு பேட்ஜ் அணிந்து வருகிறேன். பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தமிழ்நாடு இளைஞர்கள் மாநாடு என் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த மாநாடு நடைபெறுகிறது. அதிகளவு இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மீன் பாடி வண்டி தொடர்பாக ஏற்கனவே திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மக்கள் பாது காப்பு பொதுச்செயலாளர் பாத்திமா உடன் இருந்தார்.






