என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மாணவிகள்.
    X
    விடுதி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மாணவிகள்.

    விருத்தாசலத்தில் தரமான உணவு வழங்காததை கண்டித்து விடுதி முன்பு மாணவிகள் தர்ணா

    விருத்தாசலத்தில் தரமான உணவு வழங்காததை கண்டித்து விடுதி முன்பு மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 4 ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வெளியூர்களில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவிகளுக்கு தங்கி படிக்க வசதியாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு மாணவிகள் விடுதி உள்ளது.

    இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். அவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை எனவும், அரசின் சாப்பாட்டுடன் வழங்கப்படும் இலவச முட்டை மற்றும் பயிறு வகைகளும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக மாணவிகள் பல முறை விடுதி காப்பாளர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு தரமானதாக இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் காலை உணவை சாப்பிடாமல் விடுதி முன்பு ஒன்று கூடினார்கள். அவர்கள் திடீரென்று கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது மாணவிகள் எங்களை விடுதியில் சமையல் செய்பவர் காய்கறி நறுக்கி கொடுப்பது உள்பட பல்வேறு வேலைகளில் எங்களை தினமும் ஈடுபட சொல்கிறார். அந்த வேலைகளை நாங்கள் செய்யவில்லை என்றால் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரமான உணவை விடுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் முட்டை, பயிறு வகைகள் சரிவர கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல புகார்களை தெரிவித்தனர்.

    இதனை கேட்ட தாசில்தார், இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதை கேட்ட மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் தாலுகா அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×