என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால்பதப்படுத்தும் தொழிற்சாலை மூடப்படுகிறது: விருத்தாசலத்தில் பரபரப்பு
    X

    பால்பதப்படுத்தும் தொழிற்சாலை மூடப்படுகிறது: விருத்தாசலத்தில் பரபரப்பு

    விருத்தாசலத்தில் பால்பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததால் தொழிற்சாலை மூடப்படுகிறது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முல்லை நகரில் தனியாருக்குச் சொந்தமான பால்பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென்று வாயு (அம்மோனியா) கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது.

    இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள தனியார் பள்ளிக் கூட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    அவர்கள் அனைவரும் பள்ளியில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். தொழிற்சாலை ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு ஓடினர். அந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்களும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருக்களுக்கு சென்றனர்.

    தகவல் அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினர்.



    தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்தது குறித்து விருத்தாசலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அம்மோனியா வாயு பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினர். பின்னர் வாயு வெளியேறுவதை முற்றிலுமாக நிறுத்தினர்.

    தகவல் அறிந்ததும் விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

    அவர்கள் ஆய்வு செய்த போது தொழிற்சாலையில் பயன்டுத்தப்படும் மின் சாதனப் பொருட்கள் கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி பழமையான நிலையில் இருப்பதும், அதன் காரணமாகவே வாயு கசிவு ஏற்பட்டதும் உறுதியானது.

    இதைத்தொடர்ந்து பால் பண்ணையின் உரிமம் மற்றும் அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டது. பின்னர் பால்பண்ணை தொடர்ந்து இயங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    தொழிற்சாலை நிர்வாகத்தினரும் ஆலையை மூட ஒப்புக்கொண்டனர். பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×