என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவராக இருப்பவர் அய்யப்பன். கடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கடலூரில் இருந்து சென்னை சென்றார். முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடலூர் மாவட்டம் சார்பில் எனது ஆதரவை தெரிவித்து உள்ளேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு முக்கியத்துவம் கொடுத்து, பல பணிகளை செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அவரும் சிறப்பாக செயல்பட்டு ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார்.

    ஜெயலலிதா நாட்டு மக்களின் மீது அதிக அக்கறையுடன் செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். அதைபோல் கடந்த 2 மாதத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    ஜல்லிக்கட்டு பிரச்சினை, வார்தா புயல் தாக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் விதத்தில் மக்களை நேரில் சந்தித்ததோடு, அதிகாரிகளை முடுக்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார். இதனால் இளைஞர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் அதிக அளவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் நானும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.

    என் தலைமையில் கடலூர் மாவட்ட அ.தி. மு.க. நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளார்கள்.

    விரைவில் கடலூர் மாவட்டத்துக்கு ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து வருவேன். பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்துவேன். அ.தி.மு.க. உறுப்பினர்களையும், பொதுமக்களையும் அதிக அளவில் சேர்த்து அவரது கரத்தை வலுப்படுத்துவேன்.

    ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக அனைத்து பணிகளையும் செய்ய தயராக உள்ளேன்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் அதிக அளவில் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கோடு இருப்பவர் அய்யப்பன். தற்போது இவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்றால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று கடலூரில் நடந்த தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கடலூர்:

    கடலூரில் தீபா ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுகுணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஜெயலலிதா இறப்பில் பல சந்தேகங்கள் உள்ளதால் ஜனநாயகம், இறையாண்மையை காத்திட மாநில கவர்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சசிகலா முதல்வராக பதவி ஏற்றால், அந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து, கறுப்பு பேட்ஜ் அணிந்தும், வாயை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது. மக்கள் கருத்துக்கு எதிராக செயல்படும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இதனை வலியுறுத்தி, தேர்தல் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் அட்டை நகலுடன் ஜனாதிபதி, இந்திய தேர்தல் ஆணையர், தமிழக கவர்னர் ஆகியோருக்கு மனு அனுப்புவது.

    சசிகலா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் வீடுகளை முற்றுகையிடுவது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் மார்க்கெட் ரங்கா, இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையின் 146-வது ஆண்டு ஜோதி தரிசன விழாவில் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது.
    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 146-வது ஆண்டு ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தரும சாலையிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து சத்திய ஞானசபையிலும் தைப்பூச கொடியேற்றப்பட்டது. மாலையில் தரும சாலை மேடை, ஞானசபை மேடைகளில் சன்மார்க்க சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், நாடக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7 மணி, 10 மணி, நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணி என 6 காலங்களில், 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

    ஜோதி தரிசனத்தை காண்பதற்காக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்துள்ளனர்.

    விழாவையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அனிஷா உசேன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஜோதி தரிசனத்தை யொட்டி பக்தர்களின் வசதிக்காக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, சேலம், மதுரை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). பண்ருட்டி ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.

    நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் இருந்த காட்சியையும், அதன் பின்னர் கட்டாயப் படுத்தியதால் முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சியையும் அவர் பார்த்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன் தனது மனைவி அனிதா, மகன் அருள்ஜோதி ஈஸ்வரன், மகள்கள் அக்கினிபிரியா, நிஷாந்தி ஆகியோருடன் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் இருந்து ஆட்டோவில் கிளம்பினார்.

    பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகே வந்தார். அப்போது அவர் தனது கையில் மண்எண்ணெய் கேன் வைத்திருந்தார்.

    திடீரென்று அவர், “புரட்சித்தலைவர் வாழ்க, புட்சித்தலைவி அம்மா வாழ்க” என்று கோ‌ஷமிட்டார். பின்னர் சசிகலாவுக்கு எதிராகவும் அவர் கோ‌ஷம் எழுப்பினார்.

    இதையடுத்து தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதை அங்கிருந்தவர்கள் தடுத்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலகிருஷ்ணனிடம் பேசினர். பின்னர் பாலகிருஷ்ணனையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீக்குளிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீதிமன்ற வழக்கில் ஜெயலலிதா கைதாகி சிறைக்கு சென்றபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

    ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அவரே முதல்-அமைச்சராக நீடிக்க வேண்டும். சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது எனக்கு மிகவும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியது. சசிகலா முதல்-அமைச்சராக வரக்கூடாது. இதை வலியுறுத்தி நான் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கருவேப்பிலங்குறிச்சி அருகே செல்போன் பேசியவரின் காதை கடித்து துப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கனகராஜ்(வயது 22). டிப்ளமோ படித்துள்ளார். இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே சி.கீரனூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் தேவேந்திரன் வீட்டில் தங்கியுள்ளார்.

    நேற்று நள்ளிரவு கனகராஜ் சி.கீரனூரில் உள்ள சமுதாயக்கூடம் அருகே சென்றார். அங்கு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் குறளரசன்(24) அங்கு வந்தார். கனகராஜை பார்த்து வெளியூரைச் சேர்ந்த நீ நள்ளிரவில் இங்கு வந்து ஏன் செல்போன் பேசிக்கொண்டிருக்கிறாய். இங்கிருந்து போ என்று கூறினார். அதற்கு கனகராஜ், நான் எனது மாமா வீட்டில் தங்கியிருந்து வருகிறேன். என்னை இங்கிருந்து எப்படி போகச் சொல்லலாம் என்றார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

    அந்த சமயத்தில் குறளரசன் ஆத்திரமடைந்து கனகராஜின் காதை கடித்து துப்பினார். இதில் அவர் காதில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே குறளரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கனகராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கனகராஜை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக குறளரசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சின்னஆத்து குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ஜூணன் (வயது 45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இது தொடர்பான வழக்கு விருத்தாசலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. விருத்தாசலம் கோர்ட்டில் ஊழியராக சின்ன ஆத்துகுறிச்சியை சேர்ந்த வேல்முருகன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் இந்த வழக்கு சம்பந்தமான தகவல்களை காசிலிங்கத்துக்கு கூறுவதாக அர்ஜூணன் நினைத்தார். இதையடுத்து அர்ஜூணன் தனது மகன் குணசேகரன் (29), மருமகள் கற்பகவள்ளி (26) ஆகியோருடன் வேல்முருகன் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு வேல்முருகன், அவரது மனைவி வசந்தி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம், வழக்கு சம்பந்தமான தகவல்களை எதற்காக காசிலிங்கத்திடம் கூறுகிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அர்ஜூணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து வேல்முருகன், அவரது மனைவி வசந்தி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து வசந்தி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து அர்ஜூணன், அவரது மகன் குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர். கற்பகவள்ளியை தேடி வருகின்றனர்.

    விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இன்று சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கடலூர் உழவர் சந்தையில் மாநில குழு ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் செல்வி, தைனிஸ்மேரி, மருதவாணன், சுப்புராயன், ராஜேஷ்கண்ணன் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அண்ணா பாலம் அருகே சென்றபோது திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலை மறியல் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

    ஆனால், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கடலூர் அருகே கடை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த கோண்டூர் முத்துநகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 60). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இரும்புக்கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றனர்.

    இதையடுத்து ஜாபர் வீட்டைபூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். ஜாபர் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஜாபர் தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கடை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் தவித்த 8-ம் வகுப்பு மாணவன் மீட்க போலீசார் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு 1 மணிக்கு ரெயில்வே போலீஸ் ஏட்டு செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர்.

    அப்போது ரெயில் நிலையத்தில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் சுற்றித் திரிந்தான். சந்தேகத்தின் பேரில் அவனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தான்.

    இதனால் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுவன் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது பெயர் சுலைமான். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எனது சொந்த ஊர். எனது தந்தை முகமது அசேன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார் .நான் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தேன். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன்.

    மீண்டும் பள்ளிக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. என்னை என் பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினர். எனவே நான் வீட்டில் 1,000 ரூபாய் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்றேன்.

    பின்னர் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு நள்ளிரவில் விருத்தாலம் வந்தேன். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தேன்.

    இவ்வாறு அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

    இதையடுத்து சுலைமானின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மரக்காணத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்தனர். அவர்களிடம் சுலைமானை போலீசார் ஒப்படைத்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாநாடு போல் நடத்த வேண்டும் என்று தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடலூர்:

    மறைந்த முதல்-அமைச் சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் ஏராளமான பேர் செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தீபாவுக்கு அவர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவு நாளில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    இந்த நிலையில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.

    தாழஞ்சாவடி செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. துரை.அன்பரசன், குண்டியமல்லூர் காளிமுத்து, கீரப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆதிமூலம், பரமாத்மா, வடலூர் சந்திரசேகர், நெய்வேலி ராமலிங்கம், வெங்கடேசன், ரெஜினாமேரி ஆகியோர் பேசினர். ஸ்ரீமதி, சந்திரபால், மகாலிங்கம், தமிழரசி, மல்லிகா உள்பட திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஜெ.தீபாவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கிற வகையில் உறுப்பினர் படிவங்களை அச்சிட்டு உறுப்பினர்களை சேர்க்கின்ற பணியை தொடங்க வேண்டும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் ஜெ.தீபா தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை கடலூரில் இருந்து தொடங்க வேண்டும்.

    கடலூர் கிழக்குப்பகுதி என்பதால் கீழிருந்து மேல் நோக்கி பயணத்தை தொடருமாறு கேட்டுக்கொள்வது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையும், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் மாவட்ட மாநாட்டை போல் நடத்துவது.

    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    என்ஜின் பழுதானதால் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    சிதம்பரம்:

    நாகூரில் இருந்து சிதம்பரம் வழியாக சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணி அளவில் சிதம்பரம் வந்தது.

    திடீரென அந்த ரெயிலின் என்ஜின் பழுதானது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியவில்லை. பழுதான ரெயில் என்ஜினை சரி செய்ய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களது முயற்சிக்கு பலனில்லை.

    இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை, புதுசத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது.

    அந்த என்ஜினை ரெயில்வே ஊழியர்கள் கம்பன் எக்ஸ்பிரசில் இணைத்தனர். அதன் பின்னர் கம்பன் எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரம் தாமதமாக அதிகாலை 2 மணி அளவில் சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் கம்பன் எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

    கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் பழுதாகி நின்றதால் அந்த பாதையில் வரும் மண்ணை எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றன.

    சேத்தியாத்தோப்பு அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்ணை உறவினர்களும், பொதுமக்களும் வாழ்த்தினர்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தேவன்குடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 22). பி.எஸ்சி. பட்டதாரி. இவரும், வாக்கூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீ யரான சந்திரமோகன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. காதலுக்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டினர். மேலும் ரஞ்சிதாவுக்கும், சந்திரமோகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சந்திரமோகன் திடீரென ரஞ்சிதாவை திருமணம் செய்ய முடியாது என மறுத்தார். அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து ரஞ்சிதா, சந்திரமோகன் ஆகியோரையும், அவருடைய பெற்றோரையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது சந்திரமோகன், ரஞ்சிதாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சந்திர மோகனுக்கும், ரஞ்சிதாவுக்கும் அந்த பகுதியில் உள்ள தீப்பாய்ந்தநாச்சியார் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகளும், உறவினர்களும், பொதுமக்களும் மணமக்களை வாழ்த்தினர்.

    ×