என் மலர்
கடலூர்
சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி பானுமதி(வயது 34).
சந்திரசேகரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பானுமதி தன் குழந்தைகளுடன் கோவிலாம்பூண்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பானுமதியிடம் சந்திரசேகரனின் தம்பி சதீஷ் குமார் ஆபாசமாக பேசி உல்லாசத்துக்கு அழைத்தார்.
இதில கோபமடைந்த பானுமதி அவரை திட்டினார். இதையடுத்து சதீஷ்குமார் அவரது தம்பி நாகராஜ், உறவினர் ரத்தினசாமி ஆகியோர் சேர்ந்து பானுமதியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கிள்ளை போலீசில் பானுமதி புகார் செய்தார். இதையொட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். நாகராஜ், ரத்தினசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.
கடலூர் வடக்கு, கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன் தலைமை தாங்கினார்.
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் பொம்மை மந்திரிசபை, பினாமி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ளது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்காது.
ஆனால் இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். கொள்கை பிடிப்புடன் என்று நினைத்து விடாதீர்கள், ஊழல் செய்வதில் ஒற்றுமையாக இருப்பார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள் தான் ஆட்சி செய்தது.
சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிடும் போது, தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் ஊழலை சாதாரணமாக்கி விட்டார்கள். அதை மக்கள் கண்டுகொள்ளாமல் செய்யும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள். உயிர்கொல்லி நோயான ஊழலின் பிடியில் இருந்து சமுதாயத்தை மீட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளேன் என்று அன்புமணி தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார்.
எனவே புதியதோர் தமிழகம் செய்ய ஊடகங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான முற்போக்கு சக்திகள் எங்களுடன் இணைய வேண்டும்.
நாங்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து செல்லப்போகிறோம். அனைத்து சமுதாய மக்களும் பா.ம.க.வை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏனெனில் அன்புமணி ராமதாஸ் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார். எனவே அடுத்து வரும் தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்(கடலூர் தெற்கு) செல்வ மகேஷ் முன்னிலை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார்.
பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது,
கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
என்றைக்கு அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கிறாரோ அதன்பின்னர் தான் பா.ம.க.வினர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.
சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் படையாண்டவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த டாக்டர் ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி ரெட்டித்தெருவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் அருகே 6 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த சுவர் சேதமடைந்து காணப்பட்டது. அதை சீரமைக்க பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அந்த பகுதி முழுவதும் கற்கள் சிதறிக்கிடந்தன. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காம்பவுண்டு சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
காலையில் விழுந்திருந்தால் மாணவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகரில் முதியவர் ஒருவர் 2 கழுதைகளை வீதிகள் வழியாக ஓட்டி வந்தார். அவர் கழுதைப்பால் வேண்டுமா? கழுதைப்பால் என குரல் எழுப்பினார்.
இந்த குரலை கேட்டவுடன் கழுதைப்பாலா? என பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் கழுதைப்பால் விற்பனை செய்யும் முதியவர் முன்பு கூட்டம் கூடியது.
அப்போது பொதுமக்கள் அந்த முதியவரிடம் நீங்கள் யார்? இந்த காலத்தில் வித்தியாசமாக கழுதைப்பால் விற்பனை செய்கிறீர்களே என்று கேட்டனர். அதற்கு அந்த முதியவர் என் பெயர் ராமசாமி (வயது 62). திட்டக்குடியை சேர்ந்தவன் என்றார். நான் பல வருடங்களாக கழுதைப்பால் விற்பனை செய்து வருகிறேன்.
கழுதைப்பால் குடித்தால் குழந்தைகள், முதியவர்கள் உடல் நலனுக்கு உகந்தது. மஞ்சள்காமாலை, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். ஜீரணசக்தி அதிகரிக்கும் என்றார்.
மாட்டுப்பால் போன்று கறந்துவைத்து விற்பனை செய்ய முடியாது. கழுதைப்பாலில் நோய் தடுப்பு சக்தி அதிகம் உள்ளது. கழுதைப்பாலை கறந்தஉடனே பருகவேண்டும் என்றார். இதைக்கேட்ட பொதுமக்கள் கழுதைப்பாலை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
ஒரு பாலாடை (1 அவுன்ஸ்)-ரூ.40 க்கு விற்பனையானது. கழுதைபாலில் இவ்வளவு நன்மை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கூறிக்கொண்டே கழுதைப்பாலை வாங்கிச்சென்றனர்.
மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை சிதம்பரத்தை நோக்கி வந்தது. சிதம்பரத்தை அடுத்துள்ள உசுப்பூர் ரெயில்வே கேட் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார்.
இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
ரெயில் முன்பாய்ந்து பலியான வாலிபர் நீல நிறத்தில் ஜீன்ஸ்பேண்ட், வெள்ளை நிறத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார். அதில் இதயம் படம் வரையப்பட்டிருந்தது. மேலும் ‘போலீசார் என்னை மன்னிக்கவும் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டி-சர்ட்டில் இதயம் படம் வரையப்பட்டிருந்ததால் காதல் தோல்வியால் காதலர் தினத்தையொட்டி அந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே தொத்திக்குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் கடற்கரையோரத்தில் டால்பின் மீன் இறந்து கிடந்தது. அது 12 அடி நீளமும், 300 கிலோ எடையும் இருந்தது.
அந்த மீன் அருகில் மற்றொரு டால்பின் மீனும் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்படை போலீசார், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர் பூனம் சந்த் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
இறந்து கிடந்த டால்பின் மீன்களை பார்வையிட்டனர். அவைகள் எப்படி? இறந்தன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் பெரியபுறங்கனியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கன்னிமார்களுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள 23 அடி உயர கழு மரத்துக்கு ராட்சத மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.
கழுமரத்துக்கு மாலை அணிவித்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விரைவில் குழந்தைபாக்யம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. அதன்படி பெண்கள் மாலை அணிவித்து வழிபட்டனர்.
முன்னதாக அங்குள்ள குளக்கரையில் நீராடுதல் மற்றும் 7 கன்னிமார்கள் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
கடலூர் மேற்கு மாவட்ட ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் புவனகிரியில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
நகர ஒருங்கிணைப்பாளர் காத்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன் மற்றும் தில்லை வேழவன், சரவணகாந்தி, பாலமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், சட்டமன்ற வேட்பாளராக தீபா போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் வள்ளி சீனுவாசன், கஜேந்திரன், ராமலிங்கம், இளங்கோவன், பெருமாள், வின்சென்ட் ராமச்சந்திரன், மோகன்ராஜ், கம்சலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவக்குமார் நன்றி கூறினார்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் நிலவரம் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பொறுப்பு கவர்னர்தான் உள்ளார். உடனே தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்கவேண்டும். தற்போது நடைபெறும் அரசியல் சூழ்நிலையில் கவர்னர் முடிவு ஏதும் தெரிவிக்காமல் தாமதப்படுத்துகிறார்.
எம்.எல்.ஏ.க்களை கவர்னர் தனித்தனியாக அழைத்து விசாரிக்கக்கூடாது. அது ஜனநாயக விதி முறைக்கு உட்பட்டது கிடையாது. யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவரை உடனே ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். தாமதப்படுத்தக்கூடாது.
கடந்த சில மாதங்களாக அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர், கடலூர் மாவட்டம் மா.புடையூர் ஆகிய பகுதிகளில் தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
சிறுகடம்பூரில் நந்தினி என்ற தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். அப்போது நந்தினி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். உடனே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும்.
இதேபோல் தமிழகம் முழுவதும் தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்பவர்களை அழைத்து சமாதானப் படுத்தி போலீசார் அனுப்பிவைக்கின்றனர். இதை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் தைப்பூச ஜோதி தரிசனத்திற்காக வடலூருக்கு தனது தந்தையுடன் ஒரு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு தரிசனம் செய்துவிட்டு அதே மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். குருவப்பன்பேட்டை அய்யனார்கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக ஒரு காரில் வந்த 4 பேர் திடீரென இளம் பெண் வந்த மொபட்டை வழிமறித்தனர்.இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேரும், அந்த பெண்ணின் தந்தையை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர், அந்த இளம்பெண்ணை அவர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம் பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்த குமார் என்கிற உதயகுமார், வரதராஜன்பேட்டையை சேர்ந்த சங்கர் ஆகியோர் மேலும் 2 பேருடன் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், குமார் என்கிற உதயகுமார் உள்ளிட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா காட்சிபோல் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பண்ருட்டி:
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக அரசியல் நிலவரம் தெரிந்த ஒருவரையே மத்திய அரசு, தமிழகத்துக்கு நிரந்தர கவர்னராக உடனடியாக நியமிக்க வேண்டும்.
தமிழக மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தீபா, மு.க.ஸ்டாலின் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எம்.எல்.ஏ.க் களை கடத்துவது என்பது தமிழகத்துக்கு புதிதல்ல. இவை திராவிட கட்சிகளின் கலாச்சாரம்.
உயர் மதிப்புள்ள பண ஒழிப்பு நடவடிக்கையால் மோடி உலக தலைவராக உயர்ந்துள்ளார். இதில் மக்களுக்கு இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் உள்ளனர். இதை தடுக்க கோவை, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் மத்திய புலனாய்வு துறை அலுவலகங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






