என் மலர்
கடலூர்
கடலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த 169 மதுக்கூடங்கள் இன்று முதல் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 19 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை வருமாறு:-
1.கடலூர் புதுநகர்-2,
2.கடலூர் முதுநகர்-3,
3.சிதம்பரம் -1,
4.புதுசத்திரம் - 1,
5.கருவேப்பிலங்குறிச்சி-1,
6.மங்கலம்பேட்டை - 2,
7.பெண்ணாடம் - 1,
8.குள்ளஞ்சாவடி - 1,
9. நெய்வேலி டவுன் ஷிப்- 1,
10.காட்டுமன்னார்கோவில் - 1,
11.பண்ருட்டி - 1,
12.திட்டக்குடி - 1,
13.ஆவினங்குடி -1,
14.ராமநத்தம் -2.
பெண்ணாடம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்தநாள் விழாவையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் தீபா பேரவை சார்பில் இன்று டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.
பின்னர் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்தில் டிஜிட்டல் பேனரை யாரோ மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தீபா பேரவையினர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் அகஸ்டின்(வயது 40). இவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஸ்டூடியோ வைத்துள்ளார்.
நேற்று கடலூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் படம் எடுக்க வீடியோ கேமராக்களுடன் சென்றார். இரவு 11.30 மணியளவில் அகஸ்டின் மீண்டும் ஸ்டூடியோவுக்கு வந்தார். வீடியோ கேமராக்களை ஸ்டூடியோவில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். ஸ்டூடியோவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 7 வீடியோ கேமராக்கள் மற்றும் பெட்டியில் இருந்த 3 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.
இன்று காலை 5.30 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்த அகஸ்டின் அங்கு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். ஸ்டூடியோவில் கொள்ளையடித்து சென்ற மர்மமனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து ஐம்பொன் சிலையை கடத்தி, கடலூர் வழியாக புதுச்சேரிக்கு காரில் சிலர் கொண்டு செல்வதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மஞ்சக்குப்பம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 கார்கள் வேகமாக வந்தன. அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்குள்ள கார் நிறுத்தும் இடத்துக்குள் புகுந்தனர். இதை நோட்டமிட்ட போலீசார் அவர்களை நோக்கி சென்ற போது 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அவர்களை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் வந்த கார்களை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1½ அடி உயரம், 25 கிலோ எடை கொண்ட ஐம்பொன் விநாயகர் சிலை இருந்தது.
பிடிபட்ட 5 பேரையும் போலீசார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஞானசேகரன் (வயது 44), கடலூர் மஞ்சக்குப்பம் முகுந்தன் சர்மா (30), மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த வினோத் (31), செந்தில்வேல் (29), ராஜா (23) என தெரியவந்தது.
மயிலாடுதுறையை சேர்ந்த 3 பேரும் அங்குள்ள பழமைவாய்ந்த ஒரு கோவிலில் இருந்த விநாயகர் சிலையை கடத்தி, அதை ஞானசேகரன், முகுந்தன் சர்மா ஆகியோரிடம் விற்க கடலூர் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலையை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பார்வையிட்ட போது எடுத்த படம்.
இதுபற்றி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீட்கப்பட்ட ஐம்பொன் விநாயகர் சிலை சுமார் 1,600 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கக்கூடும். இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இந்த சிலையை புதுச்சேரியில் உள்ள பிரபல சிலை கடத்தல்காரருக்கு கடத்திச்செல்ல முற்பட்டு இருக்கிறார்கள். இதை புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல முயற்சி செய்தார்களா? என விசாரித்து வருகிறோம் என்றனர்.
தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இதுவரை ரூ.150 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை மீட்டு இருக்கிறோம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் இருந்து சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் இன்னும் 160 விலை உயர்ந்த சிலைகளை மீட்க இருக்கிறோம். சிங்கப்பூரில் இருந்து இன்னும் 13 சாமி சிலைகளை மீட்க வேண்டி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான 4 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சாமி சிலையை மீட்டு கொண்டு வர வேண்டியதிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் சிலையை கடத்தி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியம் வெய்யலூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது சிதம்பரத்தை சேர்ந்த அம்பேத்கார் தலைமை ஆசிரியராக (பொறுப்பு) உள்ளார். பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்தனர்.
சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இந்த தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேசுக்கு தெரியவந்தது. அவர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி சிதம்பரம் ஆர்.டி.ஓ. விஜயலட்சுமி, கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் வெய்யலூர் அரசு பள்ளிக்கு இன்று சென்றனர். அங்கு அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). பழ வியாபாரி. இவருக்கு திருமணமாகி மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் குமார் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பு திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
குமாரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமார் இன்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து, எதற்காக குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
சிதம்பரம்:
சிதம்பரம் கீழரத வீதியை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவரது மகள் பூஜா(வயது 16). சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மதியம் வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது பள்ளி பாடத்தை பூஜை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியை வில்லியம் ஷீபா பிரவுனிடம் வகுப்பு ஆசிரியை புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து மாணவி பூஜாவை தலைமை ஆசிரியை அழைத்து அவரை திட்டி பிரம்பால் கை, கால்களில் தாக்கியதாக தெரிகிறது.
மாலையில் வீட்டுக்கு திரும்பிய பூஜா தலைமை ஆசிரியை தன்னை தாக்கியதாக தந்தை ஜான்கென்னடியிடம் கண்ணீர் மல்க கூறினார்.
இதுதொடர்பாக சிதம்பரம் நகர போலீசில் ஜான்கென்னடி புகார் செய்தார். இதையடுத்து அந்த மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இன்று காலை போலீசார் சென்றனர். நடந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை வில்லியம் ஷீபா பிரவுனிடம் விசாரணை நடத்தினர்.
தாக்குதலில் காயம் அடைந்த மாணவி பூஜா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடந்தது.
அப்போது தி.மு.க.செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை தீர்மானம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இள.புகழேந்தி, துரைசரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நந்தகோபால கிருஷ்ணன், குழந்தை தமிழரசன், மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். அமைப்பு செயலாளர் பாரதி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் ஒன்றிய செயலாளர்கள் அமிர்தலிங்கம், சின்னசாமி, செங்குட்டுவன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன்மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டது.
வறண்டு கிடந்த இந்த ஏரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.50 அடியை எட்டியது. ஆனால் கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
கீழணையில் இருந்து தண்ணீர் வராததாலும், பருவமழை தவறியதாலும் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால் வறட்சியின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டது.
விருத்தாசலம்:
ஊழல் வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படத்தை பொதுஇடங்களில் வைக்கக்கூடாது, பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து ஜெயலலிதா படத்தை நீக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைசெல்வன் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ தலைமையில் இன்று திரண்டனர்.
திடீரென்று அவர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்தை உடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
கடலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசின் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் உத்தரவின் பேரில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிந்தது.
கடலூர் முதுநகர் சோனாஞ்சாவடியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளரும், மீனவருமான வடிவேல் (வயது 45) வீட்டில் டி.வி.யில் இந்த காட்சியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
மு.க.ஸ்டாலின் சட்டையை கிழித்து விட்டார்களே என்று தனது ஆதங்கத்தை அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தார். மனவேதனையுடன் காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடைக்கு சென்றிருந்த வடிவேலின் மனைவி செல்வி (32) வீட்டுக்கு வந்து பார்த்தபோது வடிவேல் தற்கொலை செய்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
செல்வியின் அழுகை சத்தம் கேட்ட அவரது மகள்கள் 3 பேரும் அங்கு வந்தனர். அவர்களும் தந்தை வடிவேல் உடலை பார்த்து கதறினர்.
இது பற்றி கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த தகவல் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்துக்கும், ஒன்றிய செயலாளர் காசி நாதனுக்கும் தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. மீனவர் அணி முன்னாள் செயலாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் வடிவேலின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-1 ‘ஏ’ பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, சேமிப்பு கிடங்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் கடந்த 14-ந் தேதி திடீரென தீப்பற்றியது.
இந்த தீ மளமளவென நிலக்கரி கிடங்கு முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தொடர் புகையால் சுரங்க பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், பணி செய்ய முடியவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நேற்று 4-வது நாளாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என்.எல்.சி. டேங்கர் லாரி மூலமும், அதிகாரிகள் அதிக திறன் கொண்ட நீர் தெளிப்பான்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீயை கட்டுப்படுத்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், என்.எல்.சி. அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், தீ அணையவில்லை. 5-வது நாளாக இன்றும் தீ பற்றி எரிகிறது. அதை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சேமிப்பு கிடங்கில் அவ்வப்போது அழுத்தம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது நடக்கக்கூடியதுதான். இதனை நீர் தெளிப்பான் மூலமாக கட்டுப்படுத்தி வருகிறோம். விரைவில் தீ முழுவதும் அணைக்கப்படும்” என்றனர்.






