என் மலர்tooltip icon

    கடலூர்

    தந்தை இறந்த சூழ்நிலையில் மனவேதனையுடன் மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதியது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்.மலைமேடு பகுதியை சேர்ந்தவர் தனராஜ்(வயது 51). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும், மகாலட்சுமி(16) என்ற மகளும் உள்ளனர்.

    மகாலட்சுமி ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார். பொது தேர்வு நடைபெறுவதால் தேர்வுக்கு அவர் படித்து வந்தார்.

    இந்நிலையில் மகாலட்சுமியின் தந்தை தன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மாலை 6 மணியளவில் திடீரென்று இறந்து விட்டார். தந்தையின் உடலை பார்த்து மகாலட்சுமி கண்ணீர் விட்டு கதறினார். இரவு முழுவதும் அவர் அழுது கொண்டே இருந்தார்.


    தேர்வு எழுத செல்ல மனம் இல்லாமல் இருந்தார். மகாலட்சுமி நன்றாக படிக்கக்கூடிய மாணவி அவர் தந்தை இறந்ததால் மனச்சோர்வுடன் இருந்தார். இதைஅறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவரை சந்தித்து பேசினார்கள். தேர்வு எழுதும் படி அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து மகாலட்சுமி அழுது கொண்டே தேர்வுக்கு படித்தார். இன்று காலை அவர் வீட்டில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள த.வீ.செ.அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.

    கண்ணீர் சிந்தியபடியே அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதினார். தந்தை இறந்த சூழ்நிலையில் மனவேதனையுடன் மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதியது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    நெய்வேலி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.45 லட்சம் மோசடி செய்த 4 பேர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.போலீசார் 4 பேரை தேடி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி அஞ்சலாட்சி (வயது 50). இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மனைவி ராணியிடம் ஏலச்சீட்டு போட்டு இருந்தார்.

    ஏலச்சீட்டு முடிந்த நிலையில் முழுத்தொகையையும் அஞ்சலாட்சி கேட்டபோது ராணி அதை கொடுக்கவில்லை. தொடர்ந்து கேட்டபோதும் அவர் பணத்திற்கு சரியான உத்தரவாதம் கொடுக்கவில்லை.

    இதனால் அஞ்சலாட்சி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் ராணி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி என்னைப்போல் பலரிடம் ரூ. 45 லட்சத்தை மோசடி செய்து உள்ளதாகவும், ராணி மற்றும் அவரது மகன் ரமேஷ் மற்றும் உறவினர்கள் சிவரஞ்சனி, பானுமதி ஆகிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊ.கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகள் காவ்யா என்ற சிவரஞ்சனி (வயது 14).

    இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சி.கீரனூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் சிவரஞ்சனி பள்ளி செல்ல அரசகுழி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவருடன் ஊ.கொளப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி (14), காமினி (11), அரசக்குழியை சேர்ந்த சவுந்தர்யா (17), கு.நல்லூரைச் சேர்ந்த ஆசிரியர்கள் தவசெல்வன் (27), பூபாலன் (33) ஆகிய 5 பேரும் நின்றனர்.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலி நோக்கி தனியார் வேன் அதிவேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் பஸ்சுக்காக காத்திருந்த மாணவி சிவரஞ்சனி உள்பட 6 பேர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் 6 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவரஞ்சனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினி, காமினி, சவுந்தர்யா, தவசெல்வன், பூபாலன் ஆகிய 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த அரசக்குழி பொதுமக்கள் விபத்து நடந்த இடமான கடலூர்-சேலம் சாலையில் உள்ள அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட் டனர்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர் கிருபானந்தம் மற்றும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறும்போது, “விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்து, டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிகவேகமாக செல்கின்றன. எனவே அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்” என்றனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் விபத்துக்கு காரணமான டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சேலம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி சிவரஞ்சனியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.

    விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட கட்சி பேனர்களை அகற்ற வேண்டும் என வடலூர் போலீசில் டிராபிக் ராமசாமி மனு அளித்தார்.
    வடலூர்:

    சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் காரில் சென்னை புறப்பட்டார்.

    வரும் வழியில் வடலூர் வந்தார். அங்குள்ள நான்கு முனைரோட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.சார்பில் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை பார்த்தார். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று வடலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று டிராபிக் ராமசாமி புகார் செய்தார். வடலூர் போலீசார் அந்த புகாரை ஏற்று பதிவு செய்தனர். பின்னர் டிராபிக் ராமசாமி காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.
    பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவியிடம் காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16). இவர் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    ஐஸ்வர்யா காந்தலவாடி கிராமத்தில் இருந்து தினமும் சிறுகிராமத்துக்கு சைக்கிளில் சென்று வருவார். அதேபோல நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சிறுகிராமம் ஏரி அருகே ஐஸ்வர்யா சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் பிரசாத் (21) உள்பட 3 பேர் ஐஸ்வர்யாவிடம் காதலிக்க சொல்லி வலியுறுத்தினர்.

    இதனால் கூச்சல் போட்ட ஐஸ்வர்யாவை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஐஸ்வர்யாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

    இது குறித்து ஐஸ்வர்யா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்கு பதிவு செய்து பிரசாந்த் என்ற வாலிபரை கைது செய்தார். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
    நெல்லிக்குப்பம் அருகே பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தானலட்சுமி(வயது 35). நேற்று முன்தினம் இரவு சந்தானலட்சுமி வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    சந்தானலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்தனர்.

    இதை தடுக்க வந்த சந்தானலட்சுமியின் வாயில் துணியை திணித்து அலாக்காக தோட்டத்துக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தனர். இதில் சந்தானலட்சுமி மயக்கம் அடைந்தார். பின்னர் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றனர்.

    அதே பகுதியில் உள்ள விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கொள்ளையர்களின் தாக்குதலில் காயம் அடைந்த சந்தானலட்சுமியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தகொள்ளை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    கொள்ளை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் டி.ஜ.ஜி.அனிஷா உசேனும் விசாரித்தார். இதையடுத்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், துணைபோலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் கொள்ளையர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அருகே சேமக்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களை தாக்கி கொள்ளையர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அந்த கொள்ளை கும்பல் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    எனவே அந்த கொள்ளை கும்பல் சித்தரசூரிலும் நகை-பணத்தை கொள்ளையடித்ததா? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பழைய குற்றவாளிகள், தொடர் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், குழுவாக வந்து தாக்கி கொள்ளையடிக்கும் முகமூடி கொள்ளையர்கள் ஆகியோரை பற்றிய முழு தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    ஜெயிலில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த பழைய குற்றவாளிகள் எங்கு உள்ளனர். அவர்களுக்கும் இந்த கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரிக்கின்றனர்.

    கொள்ளையர்கள் கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நோட்டமிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    பெண்ணை தாக்கி கொள்ளையடித்து அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்திருப்பதால் கொள்ளையர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சேலம், பெரம்பூர், திருச்சி மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையொட்டி தனிப்படை போலீசார் சேலம் மற்றும் புதுவைக்கு விரைந்து உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
    நெல்லிக்குப்பம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ.11 லட்சம் நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் மருதாடு விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 75). நிலக்கிழார். இவரது மனைவி தேவா(69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள். பாலகிருஷ்ணன் நேற்று இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து வீட்டில் அவரது மனைவி தேவா தனியாக இருந்தார்.

    வீட்டின் உள்பகுதியில் உள்ள அறையில் இரவு அவர் படுத்து தூங்கினார்.

    இதை நோட்டமிட்ட 2 மர்மவாலிபர்கள் நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். வீட்டின் பின்பகுதியில் பூட்டிக்கிடந்த அறைக்கதவை திறந்தனர். உள்ளே தேவா படுத்திருந்தார்.

    கொள்ளையர்கள் வந்ததை பார்த்ததும் அவர் திடுக்கிட்டு எழுந்தார். மர்ம வாலிபர்கள் அவரிடம் சத்தம்போட்டால் கொன்று விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர்.

    பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.

    இந்தகொள்ளை சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூரில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த சந்தானலட்சுமியை தாக்கி நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நெல்லிக்குப்பம் அருகே மருதாடு பகுதியில் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி தேவாவை கத்தியை காட்டி மிரட்டி மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    சித்தரசூரில் கொள்ளையடித்ததும் மருதாடு பகுதியில் கொள்ளை யடித்ததும் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொள்ளையர்கள் ஒரே பகுதியில் முகாமிட்டு கொள்ளை அடித்து வருவது போலீசுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

    நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற இந்தகொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லிக்குப்பம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற இந்தகொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெல்லிக்குப்பம் அருகே பெண்ணை தாக்கி 2 வீடுகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தான லட்சுமி(வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராமச்சந்திரன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சந்தானலட்சுமி தனது 2 மகன்களையும் சென்னையில் உள்ள ஒர்க்ஸ் ஷாப்புக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.

    நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் சந்தானலட்சுமி கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இரவு சந்தானலட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் முகமூடி அணிந்த 6 மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததை அறிந்ததும் சந்தானலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார், சத்தம் போட்டால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மர்ம மனிதர்கள் அவரை மிரட்டினர்.

    சந்தானலட்சுமியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். பின்னர் பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்தார்.

    இதனால் ஆத்திர மடைந்த அவர்கள் சந்தான லட்சுமியின் வயிற்றில் ஓங்கி மிதித்தனர்.

    அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் கோபத்தில் வீட்டிலிருந்து சந்தான லட்சுமியை அலாக்காக தூக்கி வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு கொண்டு வந்தனர். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.

    தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


    பின்னர் அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பரின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு வெளியே வந்தனர்.

    அதே பகுதியில் இருந்த ராஜா, பெருமாள் ஆகியோரின் வீட்டுக்கதவை மர்ம மனிதர்கள் தட்டினர். அவர்கள் கதவை திறந்து கொண்டு வெளியே வரவில்லை. கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்துள்ளது குறித்து அவர்கள் செல்போன் மூலம் அந்த பகுதியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ஊர்பொதுமக்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்றனர்.

    ஆனால் அவர்கள் முள்புதருக்குள் புகுந்து தப்பிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்குதலில் மயங்கி கிடந்த சந்தானலட்சுமியை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். 2 வீடுகளிலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து புகார் செய்தவுடன் போலீசார் உடனடியாக வந்திருந்தால் கொள்ளையர்களை பிடித்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர்.

    முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கர் கூறும்போது, இந்த பகுதியில் இது போன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. கொள்ளையர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி அருகே விஜயகாந்த் கலந்து கொண்ட உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாலை 4.55 மணி அளவில் விஜயகாந்த் காரில் அங்கு வந்தார். அவரை வரவேற்க மண்டபம் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விஜயகாந்த் அங்குள்ள தனி வாசல் வழியாக மண்டபத்தின் உள்ளே சென்றார்.

    அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தே.மு.தி.க. தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு மேடை மீது ஏறினர்.

    அவர்களை விஜயகாந்துடன் வந்திருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் தொண்டர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர்களை தள்ளிவிட்டு விஜயகாந்தை நோக்கி தொண்டர்கள் மேடைக்கு ஓடி வந்தனர்.

    இதைப்பார்த்து கோபம் அடைந்த விஜயகாந்த் மேடையிலிருந்த தனி அறைக்கு சென்றுவிட்டார். மேடை மீது ஏறி நின்ற தொண்டர்களிடம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்கி வரச் செய்தனர். சிறிது நேரம் கழித்து விஜயகாந்த் மீண்டும் மேடைக்கு வந்தார்.

    பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் வரிசையாக ஒருவருக்குப் பின் ஒருவராக புகைப்படம் எடுத்துக்கொள்ள மேடைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

    சிதம்பரம்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்தபின்பு அவர் அங்கிருந்து கார் மூலமாக சிதம்பரம் புறப்பட்டார். கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் அவருக்கு தே.மு.தி.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள சாரதா ராம் ஓட்டலில் இரவு தங்கினார்.

    கடலூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சிதம்பரம் சிவகாமிஅம்மை கலையரங்கத்தில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றது.

    நிகழ்ச்சியையொட்டி சிதம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சபா.சசிகுமார் மற்றும் துணை செயலாளர் பாலு ஆகியோர் செய்திருந்தனர்.

    கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி பண்ருட்டி அருகே உள்ள காடாம் புலியூர் ஏ.வி.மஹாலில் இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டு தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

    நாளை (28-ந் தேதி) விழுப்புரத்தில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்கிறார்.

    அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் கருப்பு கொடி காட்டினர்.

    கடலூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு வாக்களித்தனர். இதையடுத்து அந்த எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனவே போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்தார். இதை அறிந்த தொகுதி மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று கடலூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். காலை 10 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள்தொடர்புதுறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரசு சாதனை விளக்க புகைப் பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அமைச்சர் எம்.சி.சம்பத் புகைப்பட கண்காட்சியை பார்வையிட வரவில்லை. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வடலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு அவர் மீண்டும் கடலூர் வந்து சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் புதுப்பாளையத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அமைச்சர் சம்பத் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த கடலூர் தீபாபேரவையினர் அவருக்கு கருப்புகொடி காட்ட முடிவு செய்தனர்.

    புதுப்பாளையம் மெயின்ரோட்டில் தீபாபேரவையினர் சுகுணன் தலைமையில் அங்கு திரண்டனர். அமைச்சர் வரும்போது கருப்புகொடி காட்டுவதற்கு அவர்கள் தயாராக நின்றனர். தகவல் அறிந்த அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. பிரமுகர் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார். சற்றுலா மாளிகையிலேயே தங்கினார்.

    அமைச்சர் எம்.சி.சம்பத் வரவில்லை என்பதை அறிந்த தீபாபேரவையினர் ஆத்திரமடைந்தனர். சசிகலா ஆதரவு முதல்-அமைச்சருக்கு வாக்களித்த அமைச்சர் எம்.சி.சம்பத் பதவி விலகவேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி இல்லை. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று தீபா பேரவையினரை எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அமைச்சருக்கு எதிராக தீபாபேரவையினர் கருப்புகொடி காட்ட திரண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண்ணாடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் செந்தில்ராஜா(வயது 35). இவர் சத்தியவாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் செந்தில்ராஜாவின் தாய் தமிழ்செல்வி மட்டும் தனியாக படுத்து தூங்கினார்.

    இந்தநிலையில் நேற்று காலை தமிழ்செல்வி எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, இதுகுறித்து செந்தில்ராஜாவுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இதேபோல் அருகில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் ஜன்னல் கதவையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, செந்தில்ராஜா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை–பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும், பீரோவில் இருந்த வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துச்சென்ற அவர்கள் அதனை அருகில் உள்ள வாய்க்காலில் வீசிச்சென்றுள்ளனர். இதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×