என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி வேன் மோதி பலி - பொதுமக்கள் சாலை மறியல்
    X

    விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி வேன் மோதி பலி - பொதுமக்கள் சாலை மறியல்

    விருத்தாசலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊ.கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகள் காவ்யா என்ற சிவரஞ்சனி (வயது 14).

    இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சி.கீரனூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் சிவரஞ்சனி பள்ளி செல்ல அரசகுழி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவருடன் ஊ.கொளப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி (14), காமினி (11), அரசக்குழியை சேர்ந்த சவுந்தர்யா (17), கு.நல்லூரைச் சேர்ந்த ஆசிரியர்கள் தவசெல்வன் (27), பூபாலன் (33) ஆகிய 5 பேரும் நின்றனர்.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலி நோக்கி தனியார் வேன் அதிவேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் பஸ்சுக்காக காத்திருந்த மாணவி சிவரஞ்சனி உள்பட 6 பேர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் 6 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சிவரஞ்சனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினி, காமினி, சவுந்தர்யா, தவசெல்வன், பூபாலன் ஆகிய 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த அரசக்குழி பொதுமக்கள் விபத்து நடந்த இடமான கடலூர்-சேலம் சாலையில் உள்ள அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட் டனர்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர் கிருபானந்தம் மற்றும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறும்போது, “விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்து, டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிகவேகமாக செல்கின்றன. எனவே அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்” என்றனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் விபத்துக்கு காரணமான டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சேலம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி சிவரஞ்சனியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.

    Next Story
    ×