என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன்
    X
    முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆதரவு

    கடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவராக இருப்பவர் அய்யப்பன். கடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கடலூரில் இருந்து சென்னை சென்றார். முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடலூர் மாவட்டம் சார்பில் எனது ஆதரவை தெரிவித்து உள்ளேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு முக்கியத்துவம் கொடுத்து, பல பணிகளை செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அவரும் சிறப்பாக செயல்பட்டு ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார்.

    ஜெயலலிதா நாட்டு மக்களின் மீது அதிக அக்கறையுடன் செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். அதைபோல் கடந்த 2 மாதத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    ஜல்லிக்கட்டு பிரச்சினை, வார்தா புயல் தாக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் விதத்தில் மக்களை நேரில் சந்தித்ததோடு, அதிகாரிகளை முடுக்கிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார். இதனால் இளைஞர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் அதிக அளவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் நானும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.

    என் தலைமையில் கடலூர் மாவட்ட அ.தி. மு.க. நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளார்கள்.

    விரைவில் கடலூர் மாவட்டத்துக்கு ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து வருவேன். பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்துவேன். அ.தி.மு.க. உறுப்பினர்களையும், பொதுமக்களையும் அதிக அளவில் சேர்த்து அவரது கரத்தை வலுப்படுத்துவேன்.

    ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக அனைத்து பணிகளையும் செய்ய தயராக உள்ளேன்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் அதிக அளவில் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கோடு இருப்பவர் அய்யப்பன். தற்போது இவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×