என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை கோட்டையை நோக்கி 7-ந்தேதி கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம்: வேல்முருகன்
    X

    சென்னை கோட்டையை நோக்கி 7-ந்தேதி கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம்: வேல்முருகன்

    தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை கோட்டையை நோக்கி 7-ந்தேதி கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெறும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கடலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்கிறோம்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், மீனவர்கள், தலித் மக்கள் ஆகியோர் மீது போலீசார் பதிவு செய்துள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.

    போலீஸ் தடியடியின் போது காயமடைந்தவர்களுக்கும், பொருட்சேதம் ஏற்பட்டவர்களுக்கும் தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் தடியடி நடத்த காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போலீஸ் தடியடி குறித்து தற்போது பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும். தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வருகிற 7-ந்தேதி எனது தலைமையில் ஊர்வலம் நடைபெறும். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கோட்டையை சென்றடையும்.

    ஊர்வலத்தில் 150 அமைப்பினர் ஒன்றிணைந்து கருப்பு கொடி ஏந்தி கலந்து கொள்வார்கள். ஊர்வலத்தின் முடிவில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை மனு வழங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர் ஆனந்த், மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன், நகர தலைவர் ராஜேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×