என் மலர்
கடலூர்
விருத்தாசலம் அருகே உள்ளது தொட்டிக்குப்பம். இங்கு விருத்தாசலம்- மங்களம் பேட்டை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் தேசிய-மாநில நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. விருத்தாசலத்திலும் பல மது கடைகள் மூடப்பட்டது.
இதன் காரணமாக விருத்தாசலத்தில் உள்ள மது பிரியர்கள் தொட்டிக்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்து சென்றனர். இதனால் அந்த கடை முன்பு மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குடிபோதையில் அந்த வழியாக சென்ற பெண்களை சிலர் கேலியும், கிண்டலும் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.
பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்த மங்களம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் சாமியானா பந்தல் அமைத்து போராட பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பந்தல் அமைக்க அனுமதி தராவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாமியானா பந்தல் அமைத்தனர். வீட்டில் இருந்து அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து பந்தலில் வைத்து சமைத்தனர். தொடர்ந்து பந்தலில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடையை அகற்ற உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். தண்டபாணியின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 30 பவுன் நகை, ரொக்கம் ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியேறினர்.
பின்னர் அந்த பகுதியில் வேறு ஏதாவது வீட்டில் கைவரிசை காட்டலாமா? என்று நோட்டமிட்டனர். அப்போது தண்டபாணி வீட்டின் அருகேயுள்ள பாலமுருகன், என்பவரது வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனின் மனைவி ஆசிரியை மதுபாலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கலியை பறித்தனர். திடுக்கிட்டு விழித்த மதுபாலா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.
இந்த துணிகர கொள்ளை குறித்து மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் புருனே அழைத்து வரப்பட்டது. அதுகொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. மேலும் விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அரிபுத்திரன். இவர் பெரியார் நகரில் பந்தல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் விருத்தாசலம் போலீசார் இரவு நகரில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரிபுத்திரனின் பந்தல் பொருட்கள் விற்பனை கடையில் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்தனர். உடனடியாக அவர்கள் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மறுநிமிடமே 2 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பந்தல் பொருட்களில் பற்றி எரிந்த தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. தீ மளமளவென்று அருகில் உள்ள காய்கறி கடைக்கும் பரவியது.
தீயணைப்பு வீரர்களின் நீண்டநேர போராட்டத்துக்குப் பின்னரே தீயை முற்றிலுமாக அணைக்க முடிந்தது. இருப்பினும் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பந்தல் பொருட்கள் மற்றும் காய்கறிகள் நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே அரிபுத்திரனின் பந்தல் கடையில் 2 முறை தீப்பிடித்துள்ளது.
தொடர்ந்து கடையில் தீ விபத்து ஏற்படுவதால் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் மணிவாசகம். கூலித் தொழிலாளி. இவரது மகள் சோனியா(வயது 20). பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாமாண்டு படித்து வந்தார்.
செமஸ்டர் தேர்வில் சோனியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்தார். கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார்.
மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சோனியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் சோனியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் விசாரணை நடத்தினார்.
சிதம்பரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து பேசிய பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எச்.ராஜாவை எதிர்த்து இன்று போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் திடீரென்று எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுதொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சக்கரமங்கலத்தை சேர்ந்தவர் மேகராஜன் (வயது 37), பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் இருந்து தேவங்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்தார்.
அப்போது தேவங்குடியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் படியில் நின்று பயணம் செய்தார். அவரை மேலே ஏறி வருமாறு பலமுறை மேகராஜன் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் ஆத்திரமடைந்து மேகராஜனை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து மேகராஜன் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மணிமுக்தாறு பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு ஜனநாயக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
மேலும் விருத்தாசலம் பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து கரும்பு ஏற்றுமதி செய்து விட்டு அதற்கான நிலுவைத் தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் தனியார் சர்க்கரை ஆலையை கண்டிப்பது. அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மணிமுக்தாறு பாதுகாப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். விவசாயிகள் ராமர், ராஜேந்திரன், நாகராஜன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 55). தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது மகன் அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். மகள் திருவள்ளூரில் உள்ள கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.
பழனிவேலுக்கும், சகுந்தலாவுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு 10.40 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் பழனிவேல் ஆத்திரமடைந்து சகுந்தலாவை கையால் ஓங்கி அடித்தார். இதில் சகுந்தலா மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சகுந்தலா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்தகொலை தொடர்பாக பழனிவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அய்யப்பன். இவரது மகள் சிவசக்தி(வயது 11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை 6 மணியளவில் சிவசக்தி வீட்டில் படுத்திருந்தாள். அப்போது வீட்டுக்குள் புகுந்த பாம்பு மாணவி சிவசக்தி காலில் கொத்தியது. அதிர்ச்சியடைந்த சிவசக்தி அலறிதுடித்தாள். அலறல் சத்தம் கேட்டு அய்யப்பன் ஓடிவந்தார்.
வீட்டுக்குள் பாம்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது மீண்டும் மாணவி சிவசக்தியை கடிக்க முயன்றது. வெகுண்டெழுந்த அய்யப்பன் அங்கு கிடந்த தடியை எடுத்து பாம்பை அடித்துக் கொன்றார்.

பின்னர் சிவசக்தியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது சிவசக்தியை கடித்த பாம்பை ஒரு பையில் போட்டு எடுத்து வந்தார். அந்த பாம்பை ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டரிடம் காட்டினார்.
சிவசக்தியை கடித்த பாம்பு எந்த வகையை சார்ந்தது. அது விஷத்தன்மை உள்ளதா? என்பதை டாக்டர்கள் அறிந்து கொள்வதற்காக பாம்பை கொண்டு வந்தேன் என்று அய்யப்பன் கூறினார். டாக்டர்கள் பாம்பை பார்த்தனர்.

பின்னர் சிவசக்திக்கு சிகிச்சை அளித்தனர். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர். இதைகேட்டு சிவசக்தியின் பெற்றோர் நிம்மதியடைந்தனர்.
அரசு ஆஸ்பத்திரிக்கு விவசாயி பையில் பாம்புடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மகாலட்சுமி (வயது 21). இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல் லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் கல்லூரிக்கு பஸ்சில் வந்து செல்வார். வழக்கம்போல் இன்று காலை மகாலட்சுமி கல்லூரிக்கு வந்தார். 11.30 மணி அளவில் கல்லூரி வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற அவர் கல்லூரி வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி பேராசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவி மகாலட்சுமியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது மாணவி மகாலட்சுமி விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்யயப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாணவி மகாலட்சுமி கல்லூரி வளாகத்தில் விஷம் குடித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மாணவி எதற்காக விஷம் குடித்தார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. சுரங்க நீரை சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்புவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடிநீர் அனுப்புவதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியதாவது:-
வாலாஜா ஏரிக்கு அனுப்பப்படும் என்.எல்.சி. சுரங்க நீரை பயன்படுத்தி குறிஞ்சிப்பாடி, வடலூர், புவனகிரி ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றது.
தற்போது திடீரென்று வாலாஜாஏரி தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதால் விவசாயம் பாதிக்கப்படும். கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியதாவது:-
காவிரி நீர் பிரச்சினையாலும், பருவ மழை பெய்யாததாலும் வீராணம் ஏரி வறண்டுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீரை சென்னைக்கு கொண்டு செல்வதால் கடலூர் மாவட்ட விவசாயமே அழிந்து விடும். எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை கலந்து பேசி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:-
என்.எல்.சி. சுரங்க நீரை சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்புவதால் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 40 கிராமங்கள் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கும் தண்ணீரில்லாத நிலை ஏற்படும்.
இந்த பகுதியே பாலைவனமாக மாறிவிடும். எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிடவேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன.
மற்ற ஏரிகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. இதனால் சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
வடகிழக்கு பருவ மழை பெய்யாததாலும், வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்ததாலும் ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.
இதைத்தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் வீராணம் ஏரி வறண்டது. எனவே இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது திடீரென்று நிறுத்தப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தேவையை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

நெய்வேலி என்.எல்.சி.யில் 3 சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சென்னையில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தலாம் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
என்.எல்.சி.சுரங்கத்தில் இருந்து நீர் ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் நெய்வேலிக்கு அருகே உள்ள வாலாஜா ஏரிக்கு அனுப்பப்படுகிறது. விநாடிக்கு 100 கனஅடி முதல் 350 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நீர் அங்கிருந்து வடலூர் அருகே உள்ள பரவனாற்றுக்கு கொண்டு வரப்படுகிறது. பரவனாற்றில் கரைமேடு என்ற இடத்தில் பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீரை தேக்கி ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வீராணம் குடிநீர் திட்ட குழாய்களுடன் இணைக்கப்பட்டு வடக்குத்தில் உள்ள நீர்ஏற்று நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது.
பின்னர் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டமாக தண்ணீர் அனுப்பப்பட்டது.
நேற்று முதல் சென்னைக்கு அங்கிருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.






