என் மலர்
கடலூர்
வடலூர்:
திருவாரூர் மாவட்டம் செல்லூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் வசந்தகுமார் தனது நண்பர் பிரபாகரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செல்லூருக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை வசந்தகுமார் ஓட்டிவந்தார்.
மோட்டார் சைக்கிள் நள்ளிரவில் வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள பரவனாற்று தரைப் பாலம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது சாலையின் வளைவில் திரும்பியபோது வசந்தகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலைஓரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பிரபாகரன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபாகரனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகன் (வயது 57). இவர் சென்னை தாம்பரத்தில் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், நிஷா(27), திவ்யா(25) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மணிவாசகன் சென்னை அருகே சோலையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மகள் நிஷா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு அதிக பணம் தேவைப்பட்டது. எனவே மணிவாசகன் சென்னையில் உள்ள தனது நிலம் மற்றும் வீட்டை விற்க முடிவு செய்தார்.
இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். நெய்வாசலில் உள்ள பூர்வீக நிலத்தை விற்கும்படி மணிவாசகத்திடம் கூறினார்.
இதையொட்டி மணிவாசகன் சென்னையில் இருந்து நெய்வாசல் கிராமத்துக்கு வந்தார். பூர்வீக நிலத்தை விற்பது தொடர்பாக தனது சகோதரர்களிடம் பேசினார். அதற்கு அவர்கள் நிலத்தை விற்க வேண்டாம். கடன் வாங்கி திருமணத்தை நடத்தலாம் என்று தெரிவித்தனர்.
இதனால் மணிவாசகன் மனம் வருந்தினார். பின்னர் அவர் நெய்வாசலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார்.
இரவு அங்குள்ள தனிஅறையில் தூங்கச்சென்றார். காலை வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது மணிவாசகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிவாசகனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மகள் திருமணத்துக்கு நிலத்தை விற்கமுடியாததால் மனமுடைந்து சப்-இன்ஸ்பெக்டர் மணிவாசகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள கந்தப்பம்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி சரண்யா(வயது 20). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.
வெற்றிவேல் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரண்யா விருத்தாலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரண்யா வேப்பூர் அருகே மேலூரில் வசித்து வரும் தனது தாயிடம் செல்போனில் பேசினார். எனக்கு உடல்நலம் சரியில்லை என்று அவரிடம் தெரிவித்தார்.
உடனே அவரது தாயார் கந்தப்பம்குறிச்சிக்கு விரைந்து வந்தார். அவரிடம் என் கணவர் இல்லாத நேரத்தில் வேறொரு வாலிபருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் ஆனேன். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.
எனவே கருவைக் கலைக்க ஒருவரிடம் நாட்டுமருந்து வாங்கி சாப்பிட்டேன். இதனால் எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து சரண்யாவை சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது தாய் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சரண்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலில் உருவான கருவைக்கலைக்க நாட்டுமருந்து தின்ற பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால்:
கடலூர் அருகே கடந்த 3-ந் தேதி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அமயா கப்பலில் வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 5 பேர் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எங்கள் விசைப்படகு பழுதாகி விட்டது. எனவே எங்களால் கரை திரும்பமுடியவில்லை. காற்று வீசும் திசைக்கேற்ப எங்கள் படகு இங்கு வந்து விட்டது என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இலங்கை மீனவர்கள் 5 பேரையும் கப்பலில் அழைத்துச் சென்று இலங்கை கடற்படை வீரர்களிடம் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம்:
நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடை களை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் பல்வேறு டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு விட்டன. ஆனால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வீராரெட்டிக்குப்பத்தில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.
இதனால் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குடிமகன்கள் இந்த கடைக்கு திரண்டு வந்து மது வாங்கி குடிக்கிறார்கள். பின்னர் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி-கிண்டல் செய்கின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீராரெட்டிக்குப்பம் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். ஆவேசமாக வந்த பொதுமக்களை பார்த்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
எனவே பொதுமக்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி விருத்தாசலம் ஆலடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலடி போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
வடலூர்:
வள்ளலார் வாழ்ந்த வடலூர், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் உள்ளன. அவற்றை அகற்றக்கோரி சன்மார்க்க சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வடலூரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
வடலூர் 4 முனை சந்திப்பில் தொடங்கி சத்தியஞான சபை வரை ஏராளமானோர் மனிதச்சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.
போராட்டத்தில் சன்மார்க்க சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வெற்றிவேல் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
புதுவை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன் கடந்த 3-ந் தேதி தமிழக எல்லை பகுதியான ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த அமுதன், சூரியா, தேலியூர் கோபிநாத், கிருமாம்பாக்கம் புகழ் என்கிற புகழேந்தி, கூடப்பாக்கம் அன்பு என்கிற அன்பரசன், அரங்கனூர் வினோத் என்கிற சலீம், கடலூர் மாவட்டம் திருவதிகையை சேர்ந்த ஜெயராஜ், காட்டுப்பாக்கம் இளவரசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புதுவை பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த கோகுல் என்கிற கோகுல்ராஜ் கைது செய்யப்பட்டார்.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையின் முக்கிய குற்றவாளியான அமுதன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த புதுவை சட்டசபை தேர்தலின் போது நாங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தராஜ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டோம். இதனால் எங்களுக்கும், புதுவை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளரான வீரப்பனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் கந்தசாமி வெற்றி பெற்று அமைச்சராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு வீரப்பன் எங்களிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.
மேலும் மாசி மக திருவிழாவின் போது வீரப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களது ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வீரப்பன் எங்களது பகுதியான பிள்ளையார் குப்பத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவும், எங்களை அவருக்கு அடிமையாக செயல்பட வைக்க வேண்டும் எனவும் கருதி பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த நான் வீரப்பனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினேன். வீரப்பனை புதுவை பகுதியில் கொலை செய்தால் அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் எங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என கருதி தமிழக எல்லையில் கொலை செய்யலாம் என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 3-ந் தேதி வீரப்பனை வெட்டி கொலை செய்ய முடிவு செய்து அவரை வெட்டினோம். அதற்குள் அக்கம் பக்கத்தினர் கூடி விட்டதால் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தோம். ஆனால், நான் வந்த மோட்டார் சைக்கிள் இயங்கவில்லை. இதனால் வீரப்பனின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றேன்.
பண்ருட்டி பஸ் நிறுத்தம் அருகே நாங்கள் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டோம். நாங்கள் கொண்டு சென்ற பணம் தீர்ந்து விட்டதால் எங்களால் தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியவில்லை.
எனவே பணம் வாங்குவதற்காக நாங்கள் கடலூருக்கு வந்தோம். கடலூர் கோண்டூர் அருகே ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் எங்களை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
மேற்கண்டவாறு அமுதன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சிதம்பரம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் துர்கா(வயது 60). இவர் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். இன்று காலை 8 மணியளவில் இந்த கார் சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. திடீரென்று காரும், லாரியும் நேருக்கு பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் முன் பகுதி சேதமடைந்தது. காரில் வந்த துர்கா உடல்நசுங்கி அதே இடத்தில் பலியானார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்த டிரைவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் மணிமுக்தாற்று அணைக்கட்டு அருகே உள்ள வைக்கோல் போரில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நேற்று இரவு பார்த்தனர். அவர்கள் கம்மாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை பார்த்தனர். முகம் மற்றும் கை-கால்களில் காயம் இருந்தது. வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வாலிபரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் விருத்தாசலம் அருகே உள்ள சொட்டவணம் பகுதியை சேர்ந்த விவசாயி வேல்முருகன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 21) என்பது தெரியவந்தது.
வெற்றிவேல் வேப்பூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி 3-ம் ஆண்டு படித்ததும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுமுறையில் வெற்றிவேல் வீட்டுக்கு வந்து விட்டு கல்லூரி செல்வதாக கூறி சென்றதும் தெரியவந்தது.
வெற்றிவேலின் தந்தை வேல்முருகன் கம்மாபுரம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனது மகனின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறியுள்ளார்.
வீட்டில் இவரது கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்ற வெற்றிவேல் எப்படி மர்மமாக இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:
நாகை மாவட்டம் பொறையார் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி வாணி (40). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள மீதிக்குடி கிராமத்தில் வசித்து வந்தனர். அவர்களுடன் ராம்குமாரின் தாய் மங்கையற்கரசியும் உடன் இருந்து வந்தார்.

வாணிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வாணிக்கு ரத்தபுற்றுநோய் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ராம்குமாரும், மங்கையற்கரசியும் வாணியுடன் தங்கியிருந்து கவனித்து வந்தனர்.
வாணியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையொட்டி மீதிக்குடி கிராமத்துக்கு வாணியை அழைத்து வந்தனர்.
நேற்று காலை வாணி படுத்திருந்த அறைக்கு சென்று ராம்குமாரும், மங்கையற்கரசியும் பார்த்தனர். அப்போது ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாணி இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
துக்கம் தாங்காமல் ராம்குமாரும், மங்கையற்கரசியும் கண்ணீர் விட்டு கதறினர். வாணி இறந்ததும் உயிர்வாழ அவர்கள் விரும்பவில்லை. தாயும், மகனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். பின்னர் ராம்குமாரும், மங்கையற்கரசியும் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். பொதுமக்கள் கிள்ளை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று ராம்குமார், வாணி, மங்கையற்கரசி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று மாலை 3 பேரின் உடல்களும் மீதிக்குடி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. தகவல் அறிந்து அவர்களது உறவினர்கள் மீதிக்குடி கிராமத்துக்கு வந்து அழுதனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
புதுவை கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வீரப்பன் (வயது45), முன்னாள் கவுன்சிலரான இவர் அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் அமைச்சர் கந்தசாமிக்கு அரசியல் உதவியாளராக இருந்து வந்தார்.
நேற்றுகாலை வீரப்பன் மோட்டார் சைக்கிளில் புதுவை வந்து கொண்டு இருந்த போது ரெட்டிச்சாவடி அருகே காட்டுப்பாளையம் என்ற இடத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வீரப்பனின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வீரப்பனை வெட்டி கொலை செய்தது பிள்ளையார் குப்பம் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமுதவன், அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ், சூர்யா மற்றும் கடந்த சட்டசபை தேர்தலில் ஏம்பலம் தொகுயில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் கோகுல். அதே பகுதியை சேர்ந்த புகழ் மற்றும் சேலிய மேடு என்.ஆர். காங்கிரசை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 6 பேர் என்பது தெரிய வந்தது.
இதில் பிரபாகரன் போலீசாரின் பிடியில் சிக்கி கொண்டார். அவரை பாகூர் போலீசார் பிடித்து ரெட்டிச்சாவடி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
மற்ற 5 பேரையும் பிடிக்க ரெட்டிச்சாவடி போலீசார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பன் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய கொலையாளியான அமுதவன் மற்றும் சுபாஷ் ஆகியோர் ஏனாம் ஜெயிலில் சுவர் ஏறி குதித்து மர்டர் மணிகண்டனை கொல்ல முயன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் காரணமாக கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதியில் இன்று 2-வது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரும், 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே வீரப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் மதியம் உடல் பிள்ளையார்குப்பத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு அங்குள்ள இடுகாட்டில் உடல்தகனம் செய்யப்படுகிறது.
கடலூர் முதுநகர் அன்னவெளி காலனியை சேர்ந்தவர் இருசப்பன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு வெண்ணிலா(வயது 16) என்ற மகள் உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் வெண்ணிலாவுக்கும், விழுப்புரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வீரன்(24) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமி வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து வெண்ணிலாவை கடலூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.வெண்ணிலாவின் பெற்றோர் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல அதிகாரிகளுடன் பேசினர். அதற்கு அதிகாரிகள் இனி திருமண வயது வந்தவுடன் தான் உங்கள் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்.மேலும் மாதத்துக்கு ஒரு முறை வெண்ணிலாவை இங்கு அழைத்து வந்து கையெழுத்து போட வேண்டும் என்று கூறினர்.
இதை ஏற்றுக் கொண்ட வெண்ணிலாவின் தந்தை இருசப்பன், தாய் ஜானகி ஆகியோர் வெண்ணிலாவை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில் கையெழுத்து போடுவதற்காக வெண்ணிலா குழந்தைகள் நல அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர், என்னை வற்புறுத்தி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவருடன் கட்டாய திருமணம் நடத்தி வைத்தனர் என அதிகாரிகளிடம் கூறினார்.
இதுகுறித்து குழந்தைகள் நல குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே சிறுமியின் தந்தை இருசப்பன், தாய் ஜானகி, கணவர் வீரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வெண்ணிலாவின் பெற்றோரை வலைவீசி தேடி வருகின்றனர்.






