என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகள் திருமணத்துக்கு நிலத்தை விற்க முடியாததால் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மகள் திருமணத்துக்கு நிலத்தை விற்க முடியாததால் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

    திட்டக்குடி அருகே மகள் திருமணத்துக்கு நிலத்தை விற்க முடியாததால் மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகன் (வயது 57). இவர் சென்னை தாம்பரத்தில் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், நிஷா(27), திவ்யா(25) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மணிவாசகன் சென்னை அருகே சோலையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இவரது மகள் நிஷா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு அதிக பணம் தேவைப்பட்டது. எனவே மணிவாசகன் சென்னையில் உள்ள தனது நிலம் மற்றும் வீட்டை விற்க முடிவு செய்தார்.

    இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். நெய்வாசலில் உள்ள பூர்வீக நிலத்தை விற்கும்படி மணிவாசகத்திடம் கூறினார்.

    இதையொட்டி மணிவாசகன் சென்னையில் இருந்து நெய்வாசல் கிராமத்துக்கு வந்தார். பூர்வீக நிலத்தை விற்பது தொடர்பாக தனது சகோதரர்களிடம் பேசினார். அதற்கு அவர்கள் நிலத்தை விற்க வேண்டாம். கடன் வாங்கி திருமணத்தை நடத்தலாம் என்று தெரிவித்தனர்.

    இதனால் மணிவாசகன் மனம் வருந்தினார். பின்னர் அவர் நெய்வாசலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார்.

    இரவு அங்குள்ள தனிஅறையில் தூங்கச்சென்றார். காலை வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது மணிவாசகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிவாசகனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மகள் திருமணத்துக்கு நிலத்தை விற்கமுடியாததால் மனமுடைந்து சப்-இன்ஸ்பெக்டர் மணிவாசகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×