என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
விருத்தாசலம்:
நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடை களை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் பல்வேறு டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு விட்டன. ஆனால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வீராரெட்டிக்குப்பத்தில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.
இதனால் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குடிமகன்கள் இந்த கடைக்கு திரண்டு வந்து மது வாங்கி குடிக்கிறார்கள். பின்னர் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி-கிண்டல் செய்கின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீராரெட்டிக்குப்பம் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். ஆவேசமாக வந்த பொதுமக்களை பார்த்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
எனவே பொதுமக்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி விருத்தாசலம் ஆலடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலடி போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.






