என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    புதுவை அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதானவர்களை படத்தில் காணலாம்.

    புதுவை அமைச்சரின் உதவியாளரை கொன்ற 9 பேர் கைது: தேர்தல் முன்விரோதத்தில் கொன்றதாக வாக்குமூலம்

    புதுவை அமைச்சரின் உதவியாளரை கொன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தேர்தல் முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டியதாக கைதான குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    கடலூர்:

    புதுவை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன் கடந்த 3-ந் தேதி தமிழக எல்லை பகுதியான ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. இது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த அமுதன், சூரியா, தேலியூர் கோபிநாத், கிருமாம்பாக்கம் புகழ் என்கிற புகழேந்தி, கூடப்பாக்கம் அன்பு என்கிற அன்பரசன், அரங்கனூர் வினோத் என்கிற சலீம், கடலூர் மாவட்டம் திருவதிகையை சேர்ந்த ஜெயராஜ், காட்டுப்பாக்கம் இளவரசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புதுவை பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த கோகுல் என்கிற கோகுல்ராஜ் கைது செய்யப்பட்டார்.

    கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையின் முக்கிய குற்றவாளியான அமுதன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த புதுவை சட்டசபை தேர்தலின் போது நாங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தராஜ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டோம். இதனால் எங்களுக்கும், புதுவை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளரான வீரப்பனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் கந்தசாமி வெற்றி பெற்று அமைச்சராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு வீரப்பன் எங்களிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.

    மேலும் மாசி மக திருவிழாவின் போது வீரப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களது ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வீரப்பன் எங்களது பகுதியான பிள்ளையார் குப்பத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவும், எங்களை அவருக்கு அடிமையாக செயல்பட வைக்க வேண்டும் எனவும் கருதி பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நான் வீரப்பனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினேன். வீரப்பனை புதுவை பகுதியில் கொலை செய்தால் அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் எங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என கருதி தமிழக எல்லையில் கொலை செய்யலாம் என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 3-ந் தேதி வீரப்பனை வெட்டி கொலை செய்ய முடிவு செய்து அவரை வெட்டினோம். அதற்குள் அக்கம் பக்கத்தினர் கூடி விட்டதால் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தோம். ஆனால், நான் வந்த மோட்டார் சைக்கிள் இயங்கவில்லை. இதனால் வீரப்பனின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றேன்.

    பண்ருட்டி பஸ் நிறுத்தம் அருகே நாங்கள் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டோம். நாங்கள் கொண்டு சென்ற பணம் தீர்ந்து விட்டதால் எங்களால் தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியவில்லை.

    எனவே பணம் வாங்குவதற்காக நாங்கள் கடலூருக்கு வந்தோம். கடலூர் கோண்டூர் அருகே ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் எங்களை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    மேற்கண்டவாறு அமுதன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×