என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அருகே அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் வாலிபர் கைது
    X

    கடலூர் அருகே அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் வாலிபர் கைது

    கடலூர் அருகே அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
    கடலூர்:

    புதுவை கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் வீரப்பன் (வயது45), முன்னாள் கவுன்சிலரான இவர் அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் அமைச்சர் கந்தசாமிக்கு அரசியல் உதவியாளராக இருந்து வந்தார்.

    நேற்றுகாலை வீரப்பன் மோட்டார் சைக்கிளில் புதுவை வந்து கொண்டு இருந்த போது ரெட்டிச்சாவடி அருகே காட்டுப்பாளையம் என்ற இடத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வீரப்பனின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வீரப்பனை வெட்டி கொலை செய்தது பிள்ளையார் குப்பம் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமுதவன், அ.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ், சூர்யா மற்றும் கடந்த சட்டசபை தேர்தலில் ஏம்பலம் தொகுயில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் கோகுல். அதே பகுதியை சேர்ந்த புகழ் மற்றும் சேலிய மேடு என்.ஆர். காங்கிரசை சேர்ந்த பிரபாகரன் ஆகிய 6 பேர் என்பது தெரிய வந்தது.

    இதில் பிரபாகரன் போலீசாரின் பிடியில் சிக்கி கொண்டார். அவரை பாகூர் போலீசார் பிடித்து ரெட்டிச்சாவடி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

    மற்ற 5 பேரையும் பிடிக்க ரெட்டிச்சாவடி போலீசார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    வீரப்பன் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய கொலையாளியான அமுதவன் மற்றும் சுபாஷ் ஆகியோர் ஏனாம் ஜெயிலில் சுவர் ஏறி குதித்து மர்டர் மணிகண்டனை கொல்ல முயன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்த கொலை சம்பவம் காரணமாக கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதியில் இன்று 2-வது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசாரும், 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே வீரப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் மதியம் உடல் பிள்ளையார்குப்பத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு அங்குள்ள இடுகாட்டில் உடல்தகனம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×