என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பந்தல் பொருட்கள் - காய்கறிகள் நாசம்
    X

    விருத்தாசலத்தில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பந்தல் பொருட்கள் - காய்கறிகள் நாசம்

    விருத்தாசலத்தில் பந்தல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 5 லட்சம் பொருட்கள் காய்கறிகள் சேதம் அடைந்தன.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அரிபுத்திரன். இவர் பெரியார் நகரில் பந்தல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இந்த நிலையில் விருத்தாசலம் போலீசார் இரவு நகரில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அரிபுத்திரனின் பந்தல் பொருட்கள் விற்பனை கடையில் தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்தனர். உடனடியாக அவர்கள் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    மறுநிமிடமே 2 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பந்தல் பொருட்களில் பற்றி எரிந்த தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை. தீ மளமளவென்று அருகில் உள்ள காய்கறி கடைக்கும் பரவியது.

    தீயணைப்பு வீரர்களின் நீண்டநேர போராட்டத்துக்குப் பின்னரே தீயை முற்றிலுமாக அணைக்க முடிந்தது. இருப்பினும் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பந்தல் பொருட்கள் மற்றும் காய்கறிகள் நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே அரிபுத்திரனின் பந்தல் கடையில் 2 முறை தீப்பிடித்துள்ளது.

    தொடர்ந்து கடையில் தீ விபத்து ஏற்படுவதால் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×