என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஒப்பாரி போராட்டம்
    X

    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஒப்பாரி போராட்டம்

    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ளது தொட்டிக்குப்பம். இங்கு விருத்தாசலம்- மங்களம் பேட்டை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் தேசிய-மாநில நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. விருத்தாசலத்திலும் பல மது கடைகள் மூடப்பட்டது.

    இதன் காரணமாக விருத்தாசலத்தில் உள்ள மது பிரியர்கள் தொட்டிக்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்து சென்றனர். இதனால் அந்த கடை முன்பு மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குடிபோதையில் அந்த வழியாக சென்ற பெண்களை சிலர் கேலியும், கிண்டலும் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.

    பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    தகவல் அறிந்த மங்களம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் சாமியானா பந்தல் அமைத்து போராட பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

    இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பந்தல் அமைக்க அனுமதி தராவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று பொதுமக்கள் கூறினர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாமியானா பந்தல் அமைத்தனர். வீட்டில் இருந்து அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து பந்தலில் வைத்து சமைத்தனர். தொடர்ந்து பந்தலில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கடையை அகற்ற உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×