என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
    X

    விருத்தாசலம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

    விருத்தாசலம் அருகே நள்ளிரவில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். தண்டபாணியின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த 30 பவுன் நகை, ரொக்கம் ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியேறினர்.

    பின்னர் அந்த பகுதியில் வேறு ஏதாவது வீட்டில் கைவரிசை காட்டலாமா? என்று நோட்டமிட்டனர். அப்போது தண்டபாணி வீட்டின் அருகேயுள்ள பாலமுருகன், என்பவரது வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனின் மனைவி ஆசிரியை மதுபாலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கலியை பறித்தனர். திடுக்கிட்டு விழித்த மதுபாலா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

    இந்த துணிகர கொள்ளை குறித்து மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் புருனே அழைத்து வரப்பட்டது. அதுகொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. மேலும் விழுப்புரத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    Next Story
    ×