search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கார்பருவ சாகுபடி தொடக்கம் :விவசாயிகளுக்கு யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை- குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
    X

    கலெக்டர் விஷ்ணு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    கார்பருவ சாகுபடி தொடக்கம் :விவசாயிகளுக்கு யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை- குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

    • நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதைவிற்பனை நிலையங்கள் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி தொடங்கி உள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே கார்பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாமிரபரணியுடன் இணைக்க வேண்டும்

    கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகள் களக்காடு யூனியனில் உள்ளது. ஆனால் நிர்வாக கட்டுப்பாடுகள் தென்காசி மாவட்டத்தில் சிற்றாறு உட்கோட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.

    அணை பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்கு களக்காட்டில் இருந்து தென்காசிக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் சிரமம் உள்ளது. எனவே அதனை தாமிரபரணி கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், மணிமுத்தாறு பெருங்கால் பாசனம் மூலம் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜமீன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு, தெற்கு கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் முன்கூட்டியே விளைச்சல் உள்ளது.

    எனவே அக்டோபர் முதல் வாரத்தில் முதலில் இந்தப் பகுதியில் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 814.80 மில்லிமீட்டர் ஆகும். நேற்று முன்தினம் வரை 250.89 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவை விட 9 சதவீதம் குறைவு ஆகும்.

    கடந்த ஆண்டு இதே நாளில் நெல்லை மாவட்ட அணைகளின் நீர் இருப்பு 48.21 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 29.30 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கார்பருவ சாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 255 உரிமம் பெற்ற விதைவிற்பனை நிலையங்கள் உள்ளது. இங்கு விதை ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது 407 விதைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் 391 ஆய்வு முடிகள் வந்துள்ளது.

    அதில் 4 மாதிரிகள் தரமற்றது என தெரியவந்துள்ளது. அதனை விற்பனை செய்த விதை விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆய்வின் போது 10.6 மெட்ரிக் டன் எடையுள்ள தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ. 29.87 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×