என் மலர்
செங்கல்பட்டு
- அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் கருநிலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநிலம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் விவசாயி. இவரது மனைவி தேன்மொழி (வயது 29). இவர்களது மகன்கள் லோகேஷ் குமார் (8). 2-ம் வகுப்பு படித்து வந்தான். சித்தார்த் (4). எல்.கே.ஜி. படித்து வந்தான். இவர்கள் இருவரும் மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேன்மொழி தனது மகன்கள் 2 பேரையும் தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு கருநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கருநிலம் கிராமம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற டிராக்டரை தேன்மொழி மொபட்டில் முந்தி செல்ல முயன்றார். அப்போது திடீரென எதிர்ப்புறமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் வந்த தேன்மொழி, லோகேஷ் குமார், சித்தார்த் ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது டிராக்டரில் இணைக்கப்பட்ட டிரெய்லரின் பின்புற சக்கரத்தில் 3 பேரும் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் சித்தார்த் தனது தாய் கண் முன்பாக ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த காயம் அடைந்த லோகேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தான்.பலத்த காயம் அடைந்த தேன்மொழி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் கருநிலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை சேதம் அடைந்தது.
- சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுவதால் மீனவர்கள் அந்த வழியாக கடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சிமெண்டு சாலை சேதம் அடைந்தது. இதையடுத்து சேதம் அடைந்த பகுதிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் படகுகளில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும மீனவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நெம்மேலி குப்பத்தில் உச்சகட்டமாக கடல் அலைகள் முன்னோக்கி வந்து மணற்பரப்புகளை அரித்ததால் கரைப்பகுதியில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அங்குள்ள சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் இடிந்து விழுந்தன.
20 அடி தூரத்திற்கு கடல் முன்னோக்கி வந்து கரைப்பகுதியை ஆக்கிரமித்து விட்டதால் படகுகளை நிறுத்த இடம் இல்லாமலும், பிடித்து வரும் மீன்களை கருவாடாக உலர வைக்கவும் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள வெங்கட்டம்மன் கோவிலும் கடல் அரிப்பால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. திடீர், திடீரென 50 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலைகளின் கான்கிரீட்டுகள் ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுவதால் மீனவர்கள் அந்த வழியாக கடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.
இடிந்து விழுந்த சிமெண்டு சாலையின் ஒவ்வொரு பகுதியும் அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதால் அந்த பகுதிகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில் மீனவர்கள் தவித்து வருகின்றனர். தற்போது கடல் 20 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து, சிமெண்டு சாலையை சேதப்படுத்தி விட்டதால் தங்கள் படகுகளையும், மீன்பிடி வலைகளைவும் வைக்க இடம் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து கடல் அரிப்பு குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று நெம்மேலி குப்பத்திற்கு சென்று கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் தமிழக அரசு உடனே இந்த பகுதியில் தூண்டில் வளைவுகள் அமைத்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் இதுகுறித்து உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்று நெம்மேலி குப்ப மீனவ பஞ்சாயத்தார்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கலெக்டருடன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி, திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன், நெம்மேலி ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரமணிசீமான், ஊராட்சி துணைத்தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
- மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர்.
- சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி துவங்கிய நாளில் இருந்தே ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டு வாங்கியவர் போட்டியை நேரில் பார்க்க முழு நேரம், ஒரு மணி நேரம் என அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பள்ளி மாணவர்கள், செஸ் ஆர்வலர்கள், போட்டி தேர்வானவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். நாளையுடன் முடிவடைவதால் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கத்தில் செஸ் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இதனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் செஸ் விளையாட்டு பிரபலமாகி உள்ளது. நகரம் மற்றும் பட்டிதொட்டி எங்கும் "செஸ் ஒலிம்பியாட்" பற்றி பேசப்பட்டு வருவதுடன் செஸ் விளையாட்டு தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.
மாமல்லபுரம் சுற்று வட்டார கடலோரப்பகுதி மீனவர்கள் ஓய்வு நேரத்தில் சமூகநல கூடங்களில் கற்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடுவது வழக்கம். தற்போது அவர்கள் செஸ் விளையாட துவங்கியுள்ளனர். அப்பகுதி சிறுவர்கள் பலரும் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டாமல் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
- கல்வித்தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். செங்கல்பட்டு மாவட்டம், மகளிர் திட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள (அச்சரப்பாக்கம் - 1, காட்டாங்கொளத்தூர்-1, மதுராந்தகம் -2, திருக்கழுக்குன்றம்-1) ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதியாக ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் 6 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். முன் அனுபவமாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.
இருப்பிடம் சம்பந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும். விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி இணை இயக்குநர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 12-ந்தேதி ஆகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கவுதம், ஜெயந்த்.
- மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கவுதம் (வயது20), ஜெயந்த்(19). இருவரும் கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் பாண்டிச்சேரியில் உள்ள நண்பர் ஒருவரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் படூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மாநகர பஸ் மீது திடீரென மோதியது.
இதில் பலத்த காயம்அடைந்த ஜெயந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த கவுதம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை வென்றது.
- இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் 8வது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தினார்
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணி, நேற்று நடந்த 7வது சுற்று ஆட்டத்தில் கியூபா அணியை வென்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய பி அணி, முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய பி அணி, 3-1 என வெற்றி பெற்று அசத்தியது. இந்திய அணியின் இளம் வீரர் குகேஷ் பேபியானோ கரானாவை வீழ்த்தினார். இதன்மூலம் குகேஷ் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ரவுனக் சத்வானி, லீனியர் டொமிங்குவேசை வென்றார்.
- மகாலட்சுமி திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.
- உயிரிழப்பு தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பூங்குன்றனார் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கஞ்சா விற்பனை போட்டியில் ஒருவர் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.
- வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்களும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் 6 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை போட்டியில் ஒருவர் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.
மற்றொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் செங்கல்பட்டு பெரிய நத்தம் நாகத்தம்மன் கோவில் தெரு, சுடுகாட்டு தெரு, தூக்குமர குட்டை, பச்சையம்மன் கோவில், அனுமந்த புத்தேரி, ராமபாளையம், சின்னகடை மற்றும் ராட்டின கிணறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் இளைஞர்கள் கஞ்சாவை போட்டி போட்டு விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனால் கஞ்சா வாங்க வெளியாட்கள் இரவு பகலாக வாகனத்தில் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்களும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது போன்று கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் ஈடுபடுவதால் விற்பனை போட்டியில் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இதை வாங்கி குடிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.
- இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது.
இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது.
இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இது இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும்.
- செஸ் ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளாக சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.
- இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி வெற்றி பெற்றுள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து அசத்தி வருகிறார். 6 சுற்றுகளில் விளையாடிய அவர், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இன்று நடந்த 7வது போட்டியிலும் வெற்றி வாகை சூடினார். இன்றைய போட்டியில், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
- மாமல்லபுரத்திலும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
- இலவச அனுமதியால் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
மாமல்லபுரம்:
இந்தியா சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் மத்திய அரசு அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தொல்லியல்துறை சார்பில் இந்தியா முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை, அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் இன்று(5-ந்தேதி)முதல் வருகிற 15-ந் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்கலாம் என்று அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று முதல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டனர்
மாமல்லபுரத்திலும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெண்ணை உருண்டை பகுதி, கடற்கரை கோயில், ஐந்துரதம், புலிக்குகை உள்ளிட்ட நுழைவு வாயில்களில் இலவச அனுமதி குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்து டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டன.
இன்று காலை மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் இலவசமாக அனைத்து புராதன சின்னங்களையும் பார்த்து ரசித்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலவச அனுமதியால் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகம்-புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- சென்னையில் இருந்து புதுச்சேரி செல்பவர்களுக்கு சுங்க கட்டணம் ரூ.140 முதல் ரூ.250 வரை மிச்சமாகும் என்றனர்.
தமிழகம்-புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அக்கரை முதல் மாமல்லபுரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை 4 வழிச்சாலையாக கடந்த 2018-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதேநேரத்தில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த சாலையில் வெங்கம் பாக்கம் மற்றும் புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள அனுமந்தை ஆகிய இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
இதேபோல் பழைய மாமல்லபுரம் சாலையில் பூஞ்சேரி மற்றும் சர்டாஸ் அருகே 2 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக 1,270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்துள்ளது. எனவே கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் இந்த 4 இடங்களிலும் சுங்க கட்டணம் வசூல் செய்வது நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இந்த 4 சுங்கச் சாவடிகளிலும் தினமும் ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வசூல் செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் தினமும்60 ஆயிரம் முதல்75 ஆயிரம் வரை வாகனங்கள் சென்று வருகின்றன.
சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்பவர்களுக்கு சுங்க கட்டணம் ரூ.140 முதல் ரூ.250 வரை மிச்சமாகும்' என்றனர்.






