search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லூர்- சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
    X

    பில்லூர்- சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

    • சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது.
    • தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. இந்த அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரளத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    இந்த மாதம் முதல் வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம், 11 அடி என நிலையாக இருந்து வந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.

    சிறுவாணியில் நேற்று காலை நிலவரப்படி அடிவாரத்தில் 31 மி.மீ. மழையும், அணைப்பகுதியில், 27 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக நீர்மட்டம் 12.14 அடியாக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. நல்ல மழையை எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.

    இதேபோல மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 80 அடி அணையில் நீர் இருப்பு இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 83.5 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

    அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினை நீங்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×