search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் தே.மு.தி.க.வினர் மனு

    • நெல்லை மாவட்ட வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு தென் வடல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் குளத்தில் செத்த மீன்களை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    தே.மு.தி.க.

    மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சண்முகவேல் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் 7-வது வார்டு பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதுவரை பிரதான சாலையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள எங்கள் பகுதிக்கு பாதையே இல்லை. காட்டு பாதையில் மண் சாலையிலும், மழை காலத்தில் சகதிகளுக்கு இடையிலும் நடந்து சென்று வருகிறோம்.

    இதனால் மழை காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த சாலையில் நடந்து செல்வதால் முதியவர்கள் தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. எங்கள் பகுதிக்கு 3 பொது குடிநீர் இணைப்பு மட்டும் தான் உள்ளது.

    எங்கள் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இணைப்பு வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பொது மக்களுக்கு ஆபத்து நிகழும் சூழ்நிலை உள்ளது. எங்கள் பகுதியில் இருந்து அதிக தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சாலை, மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், ரேஷன் கடை என அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அப்போது பகுதி செயலாளர் மணி கண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகப் பிரியன், கார்த்திகேயன், தச்சை பகுதி செயலாளர் ராஜூ, மானூர் ஒன்றிய அவைத்தலைவர் பாபுராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சிவ குமார், பாளை பகுதி முருகன் மற்றும் சாமித்துரை, மகராஜன், மாடசாமி, ஆறுமுகம், திரவியம், மணி கண்டன், சகாதேவன், வெற்றி வேல், பேச்சிமுத்து, சுப்பிரமணியன், ரமேஷ் மாரியப்பன், சுபாஷ், மாசா னம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    மீன் பிடிக்க...

    தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு தென் வடல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் குளத்தில் செத்த மீன்களை மாலையாக அணிந்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் ஊர் பொது மக்களுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜனவரி 31-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடப்பட்டது. அப்போது மீன் பாசி குத்தகைக்காக நயினார் குளத்தினை ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 579-க்கு நான் ஏலம் எடுத்தேன். தற்போது குளத்தில் தண்ணீர் வற்றி குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ரூ.40 ஆயிரம் மதிப்பில் கட்லா மீன்கள் மற்றும் ரோகு வகை மீன்கள் வளர்த்து வந்தேன்.

    அதில் நான் வளர்த்து வரும் மீன்களை பிடிக்க சென்ற போது பொதுப்பணித்துறையினர் உங்களுக்கான அவகாசம் முடிந்துவிட்டது எனக்கூறி மீன் பிடிக்க அனுமதி மறுக்கின்றனர். இதனால் தற்போது அங்கு மீன்கள் செத்து மிதந்து வருகின்றது. மேலும் மீன்களை பிடிக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே எனக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×