என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே இளம் பெண்ணுடன் செல்பி எடுத்த வாலிபர் மீது தாக்குதல்
- பெண்ணின் அண்ணன் நண்பருடன் சேர்ந்து சரமாரி அடிஉதை
- கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறியதால் போலீசில் புகார்
கோவை,
கோவை அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாபு (வயது 22). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் இளம்பண்ணுக்கு தேவையான உதவிகளை பாபு செய்து வந்தார்.
இந்த நிலையில் தொழிலாளி இளம் பெண்ணுடன் சேர்ந்து தனது செல்போனில் செல்பி எடுத்து வைத்திருந்தார் இதனை இளம் பெண்ணின் அண்ணன் பார்த்து பாபுவை கண்டித்தார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இளம் பெண்ணின் அண்ணன் பாபுவை உப்பு தோட்டம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பாபுவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவர் டாக்டர்களிடம் நான் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறினார். ஆனால் டாக்டர்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து டாக்டர்கள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் பாபுவிடம் விசாரணை நடத்திய போது இளம் பெண்ணுடன் செல்பி எடுத்ததால் ஆத்திரம் அடைந்து அவரது அண்ணன் அவரது நண்பருடன் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






