என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் திருட்டு:திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர் கைது
- நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது.
- 2 பேரை அடையாளம் கண்டு, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 48 ஆயிரம் ரூபாய் பணம், 81 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது.
இதுகுறித்து திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசான்சாய் உத்தரவின் பேரில், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
அதன்படி, 2 பேரை அடையாளம் கண்டு, அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை சோதனை செய்தனர். சோதனையின் போது பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திண்டுக்கல் மாவட்டம் கோணவட்டம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆபேல் (வயது 32), புகையிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபுதீன் மகன் முதர்ஷீர் (38) என்பது தெரியவந்தது, அவர்களிடம் இருந்து ரூ.48 ஆயிரம் பணம், 81 ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






