என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே ஒரே கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்ததால் கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெருமாள் தீயனூர் கிராமத்தில் வெறிநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இந்த கிராமங்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை  புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாய்களை இந்த பகுதியில் அப்புறப்படுத்தினால் மட்டுமே நிரந்தரமான தீர்வு காணமுடியும்.

    கிராம மக்கள் அனைவரும் கையில் கம்புடன் அலைய வேண்டிய அவல நிலை உண்டாகியுள்ளது. பொதுமக்களின அச்சத்தை போக்குவதற்கு அதிகாரிகள் விரைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொலை வழக்கில் ஆஜராகாத திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரியலூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வேதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். (வயது 35) இவரது மனைவி பிருந்தா (28) கடந்த 2008-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  2013-ம் ஆண்டு பிருந்தா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பிருந்தாவின் பெற்றோர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் தனது மகளை கொலை செய்திருப்பார்கள் என புகார் செய்தனர். புகாரின் பேரில் அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்த போலீஸ் இன்ஸ் பெக்டர் குணசேகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
    ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் தற்போது திருச்சியில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பிடிவாரண்டுடன் விரைந்துள்ளனர்.
    கூவத்தூர் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    கூவத்தூர் மின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி (வியாழக்கிழமை )மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூவத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி,

    அல்லிநகரம், நல்லூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், வெண்மணி, வேட்டக்குடி, காடூர் நம்மங்கும், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம் மற்றும் லப்பைக்குடிகாடு ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 252 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் “தகவல் வளக்கையேட்டினை” கலெக்டர் சரவண வேல்ராஜ் வெளியிட்டார்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தாய், தந்தையரை இழந்த மற்றும் பல் வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 41 குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் வாழ் வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவியாக தலா 1 குழந்தைக்கு மாதம் ரூ.2000 வீதம் 7 மாதங்களுக்கு 41 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அரியலூர் மற்றும் தா.பழூர் வட்டாரங்களைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு தலா ரூ.2800 வீதம் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான விளக்கு பொறியினையும்,

    தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 26 விவசாயிகளுக்கு மண்வள அட்டையினையும், மாவட்ட ஆட்சியரகம் சிறுசேமிப்பு பிரிவின் கீழ் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 51 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் என மொத்தம் 128 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டகலெக்டர் சரவண வேல்ராஜ்வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன்,துணை  ஆட்சியர் (சமூகநல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், மாட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு திட்டம்) அருள்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்முகமது யூனுஸ் கான், சிறைத்துறை நன்ன டத்தை அலுவலர் அசோக், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்புராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் விஷ மருந்தை குடித்து மகள் தற்கொலை செய்து கொண்டார்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே பொய்யாதநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் ராஜேந்திரன் (55). இவருக்கு ஒருமகன், ஒரு மகள். மகள் சந்தியாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவாடி கிராமம் தங்கவேல் மகன் அண்ணாதுரை என்பவருக்கு இரண்டாம்தாரமாக திருமணம் செய்து கொடுத்தனர்.

    ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன் சந்தியாவின் தாய் சங்கீதா வாகன விபத்தில் இறந்து விட்டதால், அம்மா இறந்துபோனதில் மன உளைச்சலில் இருந்தவர் அம்மாவே இறந்தபிறகு நாம் ஏன் உயிரோடு இருக்கணும் என்று நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

    தகவல் அறிந்த ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் சந்தியாவை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டதாக ராஜேந்திரன் இரும்புலிக் குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிகோ திவ்யன் விசாரணை செய்து வருகிறார்.

    ஜெயங்கொண்டம் அருகே காது குத்து நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பரணம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சத்யராஜ் (வயது 28). இவர் கடந்த 13-ம் தேதி தனது உறவினரான சின்னப்பன் குழந்தைகளுக்கு அருகில் உள்ள வீராக்கன் வீராயி கோயிலில் நடைபெற்ற காதுகுத்தி, கிடா வெட்டி விருந்து வைத்திருந்ததால் அன்று இரவு 8 மணியளவில் சென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த பரணம் அதே தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் பாக்யராஜ் (27) என்பவர் சாதியின் பெயரை சொல்லி அசிங்கமாக திட்டியுள்ளார்.

    இதுகுறித்து சத்யராஜ் கேட்டதற்கு அருகில் இருந்த குத்து விளக்கை எடுத்து குத்தியதில் சத்தியராஜ் பலத்த காயமடைந்தார். தடுக்க வந்த வடக்கு பரணத்தைச் சேர்ந்த கங்கா, பன்னீர் ஆகிய இருவரையும் பாக்யராஜ் தம்பி சிலம்பரசன் (24), ஜெயராமன் மகன் சதீஷ் (17), செல்வம் மகன் சுரா (எ) கலைச்செல்வன் (20) ஆகியோர் அருகில் கிடந்த செங்கற்களால் கங்கா, பன்னீர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து சத்யராஜ் இரும்புலிக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிந்து பாக்யராஜ், சதீஷ், சுரா ஆகிய மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சிலம்பரசனை தேடி வருகின்றனர்.

    திருமானூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்கூடம் கிராமம் நல்லேந்திரசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 48). இவர், சென்னையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 14–ந்தேதி அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உறவினர் வீட்டு மாட்டு கொட்டகையில் ராஜலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கம் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர், விளாங்குடியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் அண்ணா சிலை முன்பு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் கட்டப்பா முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் புலிகேசி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் விவசாய கடன் தவணை காலத்தை அதிகரிக்க வேண்டும். சங்கங்களில் இருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும். பயிர் பாதுகாப்பு திட்ட காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். சுபகாரியங்களுக்கு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க உண்மை தன்மை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 544 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ராஜேந்திரன், குமார், சோலைமுத்து, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே விளாங்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில், 500, 1,000 ரூபாய் நோட்டுக்கான கெடு தேதிக்குள், விவசாய வட்டியில்லா கடன்கள், விவசாய வட்டியில்லா நகை கடன்கள், குழு கடன்கள் செலுத்துவதற்கும், உரம் வினியோகம் செய்வதற்கும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் புலிகேசி, பொருளாளர் கிட்டப்பா, போராட்டக்குழு தலைவர் சேகர், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், குமார், இணை செயலாளர்கள் சோலைமுத்து, வேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

    எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 18.11.2016-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவுச்சின்னம் மற்றும் சுற்றுலாத்தலங்கள் 300.மீ தூரத்திற்குள் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    மத்திய அரசால் 02.10.2016 முதல் வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் 300.மீ தூரத்திற்குள் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்று நினைவுச்சின்னம் மற்றும் சுற்றுலாத்தலங்கள் 300.மீ தூரத்திற்குள் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    கீழப்பழுவூரில் கிராம நிர்வாக அலுவலரின் மனைவியை தாக்கி 8 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சிவநேசன். இவர் கீழப்பழுவூர் அருகே உள்ள மேலப்பழுவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது48), மகன் அருண்குமார் (28) ஆகிய இருவரும் வீட்டில் இருந்தார்.

    அப்போது காரில் அங்கு வந்த மர்மநபர்கள் 6 பேர், வீட்டுக்குள் புகுந்து ராஜேஸ்வரியை தாக்கி அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது அதை தடுக்க முயன்ற அருண்குமாரையும் அவர்கள் தாக்கினர். இதையடுத்து அருண்குமார் வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் ராஜேஸ்வரியிடம் பறித்த தங்க சங்கிலியுடன் காரில் தப்பி சென்று விட்டனர்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜேஸ்வரி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூரில் பெரம்பலூர் சாலையில் ரெயில்வே கேட் (எண் 201) உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இங்கு ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு விட்டதால், நகரில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வாய்ப்பில்லை என்று ரெயில்வே நிர்வாகம் முதலில் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலை துறையினர் ரெயில்வே கேட் அருகில் மண் ஆய்வு செய்தனர். அங்கு மேம்பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர், திட்டக்குடி, கொளங்காநத்தம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் அரியலூர் அண்ணா நகர் வழியாக பைபாஸ் சாலைக்கு செல்லும் வகையில் புதிய சாலை போடப்பட்டுள்ளது.

    ரெயில்வே கேட் அருகேயுள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கான வழியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
    ×