என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவிலில்  மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    மகா சிவராத்திரிவிழாவை  முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. மஞ்சள்,  சந்தனம்,  தேன், பால், பன்னீர்,மாவு பொடி, திரவிய பொடி, இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது. 

    மேலும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில்  பொறியாளர் கோமகன் ஏற்பாட்டில் பரத நாட்டிய பள்ளி குழுவினரின் தனிநபர் மற்றும் குழுவாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிகளுக்கு கங்கை கொண்ட சோழபுரம் மேம் பாட்டு குழுமம், நாட்டியாஞ்சலி குழுவினர் ஏற்பாட்டில் சென்னை ராஜலட்சுமி கல்வி நிறுவன உதவியுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மூலம் 7ம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. 

    இதில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், பெங்களூர், மைசூர், சென்னை,கோயம் புத்தூர், உள்ளிட்ட பலப் பகுதிகளில் இருந்தும் பல நாட்டியப்பள்ளி கலைஞர்களும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவிகளும்  நடனமாடினர். 

    மேலும் நாட்டியாஞ்சலியை நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் என  பலர் கண்டு களித்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமலை செல்வி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்து பேசினர்.

    80 மாணவர்கள் தங்களது படைப்புகளை  காட்சிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர் சாந்தி செய்திருந்தார். கண்காட்சி நிறைவில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சர்.சிவி.ராமன் அறிவியல் கோட்பாடு, அவரது அறிவியல் ஆய்வுகள் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செங்குட்டுவன், பவானி, கவிதா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில், மின்சாரம் இல்லாத நீர் ஏற்றும் பம்பு, தானியங்கி விசிறி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, காடுகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    செந்துறை அடுத்த பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் ராமன் தொடக்கி வைத்து, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பேபி முரளிகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பஞ்சாபிகேசன் செங்குட்டுவன், ஜோதிலிங்கம், வெங்கடேசன், சங்கர், ரோஸ், சிவகுமார், திருமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    முன்னதாக பட்டதாரி ஆசிரியர் பசுபதி வரவேற்றார். முடிவில் இடைநிலை ஆசிரியை வளர்மதி நன்றி தெரிவித்தார். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    ஒன்றிய குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண குழு கூட்டம், ஒன்றிய பெருந்தலைவர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குருநாதன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய நிதியில் நடைபெறும் வேலைகள் குறித்து, கணக்கு வழக்குகளை பிரிவு எழுத்தர் வெங்கடாஜலபதி வாசித்தார். இதில் கழுவந்தோண்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் இறுத்திக்குள் நீதிமன்ற வளாகம் திறக்க இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதன் பேரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் எடுத்து சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனுமதி இன்றி நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறி ஆளும் கட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 10&க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து துணைத் தலைவர் லதா கண்ணன் கூறுகையில்:
     
    ஜெயங் கொண்டம் கழுவந் தோண்டி அருகே புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாலைகள் செப்பனிடுவதற்காக பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள சாலையை மன்ற உறுப்பினர் அங்கீகாரம் இன்றி நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.

    இதனை கண்டித்து ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் சாதாரண குழு கூட்டத்தில் இருந்து 10& க்கும் மேற்பட்டோர் தற்போது வெளி நடப்பு செய்துள்ளதாகவும், கூட்டம் நடை பெறுவதற்கு முன்பாக இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இருப்பினும் கவுன்சிலர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் கூட்டத்தில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த பதில் கவுன்சிலருக்கு திருப்தி அளிக்காததால் ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என அறிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    மேலும் இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன் கூறுகையில்  இனி வருங்காலங்களில் மன்ற கூட்டங்களில் அனுமதி பெற்ற பின்னரே எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம் அருகே காதலியுடன் திருமணம் நடக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி-அழகுராணி தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் தேவேந்திரன்,   

    விவசாயத்துறையில் பட்டப்படிப்பு படித்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சொந்த ஊருக்கு வந்தார். 

    இதற்கிடையே அவர் உறவினரான அன்னக்காரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டு தேவேந்திரனின் பெற்றோர் சென்றனர்.

    ஆனால் மதுப்பழக்கம் உள்ளதாக கூறி தேவேந்திரனுக்கு பெண் கொடுக்க அவர்கள் மறுத்து விட்டனர். பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காததால் காதலியும் அவரை மணக்க   சம்மதிக்கவில்லை. 

    இதனால் மனமுடைந்த தேவேந்திரன், கடந்த 20-ந்தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தேவேந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தாயார் அழகுராணி, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ரேசன் அரிசியை மாவாக அறைத்து கடத்திய 2 பேரிடம் விசாரணை
    அரியலூர்:


    அரியலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் செந்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். 

    அதில் பொதுவிநியோகத் திட்ட ரேஷன்  அரிசி மாவாக அரைத்து 2300 கிலோ சட்டவிரோதமாக கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    உடனே  வாகனங்களின் உரிமையாளர்களான குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பீர்முகமது மற்றும் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை மாவாக அரைத்து கால்நடை தீவனத்திற்கு  கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.  

    அதனை தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, அவர்களிடம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற  புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வழித்துணை நாதர் கோவிலில் கோமாதா பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு மரகதவல்லி சமேத மார்க்க ஈஸ்வரர் வழித்துணை நாதர் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கோமாதா பூஜையுடன் கொடியேற்றம் தொடங்கப்பட்டது.

    இதில் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று உற்சவ மூர்த்திகள் வீதி உலா வர உள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் சிவபூஜை செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் வழங்கி பிரசாதம் வழங்கப்படும். 

    கோவில் அர்ச்சகர் ஜெயஸ்ரீ சிவலோகநாதர், ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் ஊராட்சி மன்ற தலைவர், ஊர் பொதுமக்கள் கூடி கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உழவாரப் பணிகள் நடைபெற்று, பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இக்கோவிலில் சிவனும், பார்வதியும் இணைபிரியாமல் இருப்பதால் நாயகனைப்பிரியாள் எனும் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகி குரு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் நகரச் செயலாளராக இருந்து வந்தவர் மாதவன் தேவா. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் கோ.க.மணி நகர செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார்.

    இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாதவன் தேவா தனது பிறந்தநாளை முன்னிட்டும், நான்கு வார்டுகளில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு தனது ஆதரவாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் காடு வெட்டியில் உள்ள மறைந்த முன்னாள் வன்னியர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெ.குருவின் மணி மண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
     
    அப்போது காடுவெட்டியிலுள்ள சிலருக்கு மாதவன் தேவா வரும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாதவன் தேவாவை உள்ளே விடக்கூடாது என கூறி ஏராளமான கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் அப்பகுதியில் திரண்டு இருந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்திற்கு முன்பாகவே ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரம், ரவிசக்கரவர்த்தி உள்ளிட்ட போலீசார்

     மாதவன் தேவா வந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்பொழுது அங்கு செல்ல வேண்டாம் எனவும் பின்னர் ஒருநாள் செல்லலாம் என பேச்சு வார்த்தை நடத்தி மாதவன்தேவா மற்றும் மாதவன் தேவாவின் ஆதரவாளர்களை அங்கு செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

    இதனால் மாதவன்தேவா ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
    அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மான்ட் போர்ட் பள்ளியில் மாநில அளவிலான வினாடிவினா போட்டி நடைபெற்றது.  போட்டியினை அரியலூர் அரசுகலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி தொடங்கி வைத்தார். 

    போட்டியில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், சேலம், மன்னார்குடி, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    பல்வேறு கட்டங்களாக ஆன்லைன் மூலமாக தேர்வு போட்டிகள் நடை பெற்றது. இறுதி நேரடி போட்டிக்கு 15அணிகள் தகுதி பெற்றன, ஜீனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 

    ஜீனியர் பிரிவில் மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், திருச்சி தனலெட்சுமி சீனிவாசன் பள்ளி 2ம் இடத்தையும், ரெட்டி பாளையம் பிர்லா ஆதித்யா பள்ளி 3ம் இடத்தையும், 

    சீனியர் பிரிவில் திண்டிவனம் மான்ட்பேர்ட் பள்ளி முதலிடத்தையும், காட்டூர் மான்ட்போர்ட் பள்ளி 2ம் இடத்தையும், பெரம்பலூர் செயின்ட்ஜோசப் பள்ளி 3ம் இடத்தையும், 

    சூப்பர்சீனியர் பிரிவில் ஜெயங் கொண்டம் பாத்திமா பள்ளி முதலிடத்தையும், அரியலூர் மான்ட்போர்ட் பள்ளி 2ம் இடத்தையும், சேலம் செயின்ட்மேரிஸ் பள்ளி 3ம் இடத்தையும் பிடித்தன. 

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் அந்தோணிசாமி செழியன் தலைமை வகித்தார், கல்வியாளர் சென்னை கோபிநாத் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ், பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  

    நிகழ்ச்சியில் எக்ஸ்டா மார்க் நிறுவனத்தின் மண்டல மேலாளர் மோகன், கவிதா, பாஸ்கர்,  எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவா, ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக் குடியிருப்பு பகுதிகளில் வெளிமாநில லாட்டரிசீட்டு விற்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு  ரகசிய தகவல் வந்துள்ளது. 

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில்  நடவடிக்கையில்   ஈடுப்பட்டனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேரை பிடித்து   விசாரித்தனர். 

    விசாரணையில்   அவர்கள் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் 36 மற்றும் குமார் 44 என்பதும், அவர்கள் வெளி மாநில லாட்டரிசீட்டு கள் விற்றதும் தெரிய வந்தது. 

    இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 39 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து  விசாரணை நடந்து வருகிறது.
    மணல் கடத்தல் வழக்கில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடத்தில் அரசு அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆண்டிமடம் மண்டல துணை வட்டாட்சியர் செல்வத்திற்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதைத் தொடர்ந்து  ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், குவாகம் வருவாய் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் ஆண்டிமடத்தில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். 

    விசாரணையில் லாரியிர் அரசு அனுமதியில்லாமல் கிராவல் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்துஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

    அதன் பேரில் அங்கு சென்ற சப்&இன்ஸ்பெக்டர் நடேசன் இது குறித்து வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தார். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.
    உடையார்பாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோரைக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் வயது 24. 

    இவர் கும்பகோணம் மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்கு தனது கிராமத்தில் இருந்து  மோட்டார் சைக்கிளிலில் சென்றுள்ளார். அப்போது நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்ற போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே விக்னேஷ் உடல் நசுங்கி பலியானார். விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.

    இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன ஆணை வழங்க வேண்டும். டி.ஆர்.பி, பாலிடெக்னிக் தேர்வுகளுக்கு பணியாற்றிய மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டிய பஞ்சப்படி மற்றும் பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

    12 மணி நேரத்துக்கு மேல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தேவையான உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் மு.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மு.ஜெயராமன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.சாமிதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
    ×