search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அட்சய திருதியை: கடந்த ஆண்டை விட 20 சதவீத நகைகள் கூடுதல் விற்பனை
    X

    ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் பெண்கள் ஆர்வமுடன் தங்க நகைகளை தேர்வு செய்யும் காட்சி.

    அட்சய திருதியை: கடந்த ஆண்டை விட 20 சதவீத நகைகள் கூடுதல் விற்பனை

    • மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனர்.
    • அதிகாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது.

    சென்னை :

    வளங்களையும், நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருள் அளவில்லாமல் சேரும் என்பது நம்பிக்கை. அதனாலேயே அட்சய திருதியை நாளன்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள், வீடு மனைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான அட்சய திருதியை நேற்று முன்தினம் காலை 7.49 மணிக்கு தொடங்கி நேற்று காலை 7.47 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது.

    சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான நகைக்கடைகளில் நல்ல விற்பனை நேற்று நடந்தது. தங்கத்தை போலவே வெள்ளி விற்பனையும் ஜோராக நடந்தது.

    அட்சய திருதியையொட்டி கடந்த ஆண்டை காட்டிலும் தங்க நகைகள் விற்பனை கூடுதலாக நடந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை தங்கம்-வெள்ளி நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

    3 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் நல்ல வியாபாரம் நடந்திருக்கிறது. மக்கள் ஊதிய ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றிருக்கிறார்கள். நகைகள் முன்பதிவும் ஜோராக நடந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று 18 டன் அளவில், அதாவது ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனை நடந்தது. இந்த ஆண்டு நகைகள் விற்பனை 20 சதவீதம் கூடுதலாக நடந்துள்ளது. முன்பதிவும் 25 சதவீதம் கூடுதலாகவே நடந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் விற்பனை என்பதால், இந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனை ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விற்பனையான தங்க நகைகள் விவரம் குறித்து இன்றோ (திங்கட்கிழமை), நாளையோ (செவ்வாய்க்கிழமை) வெளிவர வாய்ப்புள்ளது.

    Next Story
    ×