என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் விபத்து: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
- கார் மோதி ஓட்டல் தொழிலாளி சாவு
- லாரி மோதியதில் மொபட்டில் சென்ற என்ஜினீயர் பலி
கோவை,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு யாதவ் (வயது 25). இவர் நீலாம்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
பின்னர் அவினாசி ரோடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சோட்டு யாதவ் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சோட்டு யாதவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (49). என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பினார்.
மொபட் கோவை- அவினாசி ரோட்டில் கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலசுந்தரம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






