என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரியில் கத்தியால் தாக்கி தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; 2 வாலிபர்கள் கைது
- சபீன் ராஜா மற்றும் அவரது நண்பரான சிவக்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தெருவில் வேகமாக சென்றுள்ளனர்.
- அதனை கண்ட சுகுமார் குழந்தைகள் உள்ள இடத்தில் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுகுமார் (30), சென்ட்ரிங் தொழிலாளி.
இதே பகுதியில் பாரதி நகரை சேர்ந்த சபீன் ராஜா (25) என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சபீன் ராஜா மற்றும் அவரது நண்பரான சிவக்குமார் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் செல்வராஜ புரத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அவர்கள் தெருவில் வேகமாக சென்றுள்ளனர். அதனை கண்ட சுகுமார் குழந்தைகள் உள்ள இடத்தில் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.
இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மீண்டும் அங்கு வந்த சபீன் ராஜா, சிவக்குமார் ஆகியோர் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது சபீன் ராஜா கத்தியால் தாக்கியதில் சுகுமாருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் கூடினர்.
அப்போது சபீன் ராஜாவும், சிவக்குமாரும் சுகுமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த படி அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் சுகுமார் காயல்பட்டினம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபீன் ராஜா, சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.