என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரமடையில் எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ விபத்து
- ரூ.55 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
- இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்மம்பாளையம் புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது34).
இவர் காரமடையில் எலக்கட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கார்த்திகேயன் வழக்கம் போல வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் காவலாளியான செல்வராஜ் என்பவர் காவல் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 11 மணியளவில் எலக்ட்ரிக்கல் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான காவலாளி செல்வராஜ் சம்பவம் குறித்து உடனடியாக கடை உரிமையாளர் கார்த்திகேயனுக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளைம் தீயணைப்பு துறையினர், காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் கடையில் ரூ.50 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரையிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






