என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி சந்தையில் காளை மாட்டை இறைச்சிக்காக விற்க இளம்பெண் எதிர்ப்பு
- போலீசார் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- இந்த சம்பவத்தால் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி,
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் 52 வயதான வியாபாரி.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு அடுத்த தேவராயபுரத்தை சேர்ந்த தீபா (29) என்பவரிடம், ஒரு மாடு, கன்று, ஒரு காளை மாட்டினை ரூ.72 ஆயிரத்திற்கு வாங்கினார்.
அதில் மாட்டையும், கன்றையும் மட்டும் வளர்ப்புக்கு வைத்து கொண்டு, காளை மாட்டை கேரளாவுக்கு இறைச்சிக்காக விற்க முடிவு செய்தார்.
இதற்காக கடந்த 3-ந் தேதி வியாபாரி, காளை மாட்டை பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு வந்திருந்தார்.
இதுபற்றி அறிந்ததும், தீபாவும், பொள்ளாச்சி சந்தைக்கு வந்தார். அவருடன் பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க வினரும் வந்தனர்.
அவர்கள் மாட்டை கேரளாவுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தீபா, மாட்டை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தானே அந்த மாட்டை திரும்ப வாங்கி கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார், அந்த வியாபாரியிடம் இருந்து மாட்டை தீபாவிடம் வாங்கி கொடுத்தனர். பின்னர் அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






