என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை அருகே ஊருக்குள் புகுந்து வாகனங்களை மறித்த ஒற்றை யானை
- பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
- யானை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவார பகுதிக்கு விரட்டப்பட்டது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை பயத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினர் விரட்டும் போது ரோட்டின் நடுவே சென்ற யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து நின்றது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்தனர்
தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட்டினர்.






