என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது
- தீபக் ஈஸ்வரன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை காரமடையை சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன்(25).
இவர் பி.கே.புதூர் பகுதியில் தங்கி குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது அறையின் அருகே கடலூர் திட்டக்குடியை சேர்ந்த 18 வயது மாணவர், சேலம் கே.கே.பாளையத்தை சேர்ந்த ஷெல்டன் (20), மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த ஹரி (20) ஆகியோர் தங்கி இருந்தனர்.
இவர்களது அறைக்கு இவர்களுடன் படித்து வரும் குனியமுத்தூர் சாய்கார்டனை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் அடிக்கடி வந்து செல்வார்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அறையில் இருந்து கஞ்சா புகைத்து வந்தனர். மேலும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த தீபக் ஈஸ்வரன் இதுபோன்று செய்யக்கூடாது. இது தவறு என சொல்லி அவர்களிடம் தட்டி கேட்டார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து தீபக் ஈஸ்வரனிடம் நீ எங்கள் விவகாரத்தில் தலையிடாதே உனக்கு நல்லது இல்லை என கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன அவர் சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கல்லூரி மாணவர்களுக்கு குனியமுத்தூரை சேர்ந்த பிரனாய், ஷ்யாம் ஆகியோர் கஞ்சா சப்ளை செய்து வந்ததும், இதனை கல்லூரி மாணவர்கள் 4 பேரும் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவர்களான சதாம் உசேன், ஷெல்டன், ஹரி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.






