என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான வேனில் சிக்கிய டிரைவரை மீட்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.
விக்கிரவாண்டியில் ஒரு மணி நேரம் போராடி வேன் டிரைவரை மீட்ட பொதுமக்கள் 3 பேர் படுகாயம்
- கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னாள் சென்ற கண்டெயினர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
- முன்பக்கத்தை நீக்கி, அதில் சிக்கியிருந்த டிரைவரை பொதுமக்கள் மீட்டனர்.
விழுப்புரம்:
சென்னையை சேர்ந்த சஞ்சய் (வயது 35), லலிதா (30) தம்பதியினர் தங்களது குடும்பத்தை சேர்ந்த 10 பேருடன் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு இன்று அதிகாலை புறப்பட்டனர். சொகுசு வேனை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஜீவா (24) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று காலை 7.30 மணியளவில் விக்கிரவாண்டி வெங்க டேஸ்வர நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னாள் சென்ற கண்டெயினர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சொகுசு வேனின் டிரைவர் இருக்கை பக்கம் சேதமடைந்தது. விபத்தில் டிரைவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், டிரைவரின் கால்கள் மாட்டிக் கொண்டு அவரால் வெளியில் வரமுடியவில்லை. சொகுசு வேனில் பயணித்த சஞ்சய் மற்றும் லலிதாவிற்கு கைகளில் அடிபட்டது. இது தவிர 4 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்ற வர்கள் காயமடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சொகுசு வேனில் சிக்கிய டிரைவரை மீட்கும் முயற்சியில் சுமார் 1 மணி நேரம் ஈடுபட்டனர். கயிறு, கடப்பாரை கொண்டு சொகுசு வேனில் முன்பகுதியை நீக்க பொதுமக்கள் முயற்சித்தும் டிரைவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரத்தை வர வழைத்து சொகுசு வேனின் முன்பக்கத்தை நீக்கி, அதில் சிக்கியிருந்த டிரைவரை பொதுமக்கள் மீட்டனர். அவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார், விபத்துக்குள்ளான சொகுசு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






