search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு

    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45- வது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ெதாடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது.   முதல் நாளான கடந்த  25-ந் தேதி (புதன்கிழமை)  அன்று கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

    கோடை விழாவின் 7-வது நாளான நேற்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

    போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

    8-வது நாளான இன்று (புதன்கிழமை) கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவடைந்தது. காலை 11 மணிக்கு  விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி,  பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக  இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
    விழா நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.   விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  

    சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   அதுபோல் மலர்கள் முன்பாக தங்கள் பெற்றோரை மழலைகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏரியில் படகு சவாரி  செய்து மகிழ்ந்ததோடு, மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். காய்கறிகளால் ஆன காட்டெருமை, விமானம்,  அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீருற்று, மலர்களால் வடிவமைக்கப்பட்ட   மேட்டூர் அணை, பெண்களுக்கான இலவச பஸ், மாட்டு வண்டி, சின்-சான் பொம்மை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல்வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

    இதில் சிறந்த கண்காட்சி அரங்கங்கள் எவை? என தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட  கலெக்டர் கார்மேகம்  சான்றிதழ்கள் வழங்கினார்.  மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த  துறை அலுவலர்களையும் பாராட்டினார்.

    விழா நிறைவு நாளான இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட சிறப்பு பஸ்கள் அதிக எண்ணிக்கையில்  விடப்பட்டன. அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஏற்காடு அடிவா ரத்திற்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×