search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    சமூக நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றும் காரமான அரசுதான் தி.மு.க. அரசு- மு.க.ஸ்டாலின்

    மாமல்லபுரத்தில் ஒரு நரிக்குறவப் பெண்ணின் மனதில் நம்பிக்கையை விதைத்ததில், அவரது சுயமரியாதையை நிலைநாட்டியதில் இந்த ஆட்சியினுடைய இதயம் இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாசித்தார். அவர் பேசியதாவது:

    எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கிறது. அதற்கு ’திராவிட மாடல்’ என்று நான் பெயர் சூட்டி இருக்கிறேன்.

    ‘திராவிட மாடல்’ எது என்று கேட்டால், அது என்னுடைய இதயத்தில் மட்டுமல்ல; தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கான எண்ணம் கொண்ட அனைவரது உள்ளத்திலும் உள்ளது. இந்தக் கூட்டு எண்ணம்தான் அரசின் இதயத்துடிப்பாக விளங்குகிறது.

    இந்த அரசாங்கத்தின் இதயம் என்பது, மிகக் கொடூரமான குண்டுவீச்சுக்கு மத்தியில், மரண பயத்தில் வாழ்ந்து வந்த உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வந்ததில் இருக்கிறது.

    43 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாகி, பூமி செழித்தது அல்லவா? மண்ணைச் செழிக்க வைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது இந்த அரசாங்கத்தின் இதயம்.

    மாமல்லபுரத்தில் ஒரு நரிக்குறவப் பெண்ணின் மனதில் நம்பிக்கையை விதைத்ததில், அவரது சுயமரியாதையை நிலைநாட்டியதில் இந்த ஆட்சியினுடைய இதயம் இருக்கிறது.

    ஆவடியில் இருளர் இன மக்கள் இல்லத்திற்குச் சென்றபோது அவர்கள் கொடுத்த கறிக்குழம்பு காரமாக இருந்தது. ‘இவ்வளவு காரமாகவா சாப்பிடுகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘ஆமாம், இவ்வளவு காரமாக சாப்பிடும் காரணத்தினால்தான் எங்களுக்குக் கொரோனாவே வரவில்லை’ என்று அந்த மக்கள் சொன்னார்கள். அது அறிவியல் பூர்வமானதா என்பது வேறு. ஆனால், அந்த உணவின் காரத்தில் அவர்களது அன்பு வெளிப்பட்டது.

    இந்த அரசும் காரமான அரசுதான். காரம் எப்படி நோய்களில் இருந்து தங்களைக் காக்கும் என்று அந்த மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அப்படி சமூக நோய்களிலிருந்து காப்பாற்றும் மக்கள் நம்பும் காரமான அரசுதான் நம்முடைய கழக அரசு.

    என்னுடைய கவலையெல்லாம், என்னுடைய பயமெல்லாம் இந்த நம்பிக்கையை எப்போதும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் கடினமாக உழைத்தாக வேண்டும், உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த அமைச்சரவையே இன்னும் அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறது.



    Next Story
    ×