என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை
கோவையில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த தொழிலாளி கழுத்தறுத்து கொலை- மகன் வெறிச்செயல்
கள்ளக்காதலிக்கு பணத்தை கொடுத்த தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை புலியகுளம் நியூ குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 61). இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வருகிறார்கள்.சுரேஷ் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு புலியகுளம் பகுதியில் கணவரை இழந்து வசித்து வந்த விமலா (51) என்ற பெண்ணுடம் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவி வசந்தாவுக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து அவர் தனது கணவரை பிரிந்து மகனுடன் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கருப்பசாமி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது கிடைத்த ஓய்வூதிய பண பலன் ரூ. 6 லட்சம் பணத்தை கள்ளக்காதலி விமலாவிடம் கருப்பசாமி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் சுரேஷ் தனது தந்தையை அடிக்கடி நேரில் சந்தித்து தான் கஷ்டப்படுவதால் பணம் கொடுத்து உதவும்படி கேட்டார். ஆனால் கருப்பசாமி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது சுரேசுக்கு தனது தந்தை மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
நேற்று இரவு கருப்பசாமி அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் தனது கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். அவர் போதையில் வந்ததால் கள்ளக்காதலி விமலா கதவை திறக்காமல் படுத்து தூங்கி விட்டார்.
இதனையடுத்து அவரது வீட்டு வாசலில் கருப்பசாமி படுத்து இருந்தார். நள்ளிரவு 11.45 மணியளவில் சுரேஷ் தனது தந்தையிடம் பணம் கேட்பதற்காக வந்தார். படுத்து தூங்கி கொண்டு இருந்தவரை எழுப்பி அந்த பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே அழைத்து சென்றார்.
அங்கு வைத்து பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் நிலைதடுமாறிய கருப்பசாமி தப்பிப்பதற்காக 10 மீட்டர் தூரம் ஓடி கீழே விழுந்தார். பின்னர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது தந்தை இறந்ததும் சுரேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலிக்கு பணத்தை கொடுத்த தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சுரேஷை தேடி வருகிறார்கள்.
Next Story






