search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
    X
    பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

    50 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் நாளில் தடுப்பூசி- 10 நாட்களில் முடிக்க திட்டம்

    தமிழகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி ஒன்றே பேராயுதமாக கருதப்படுவதால் ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நாடு முழுவதும் நேற்று (16-ந் தேதி) முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரில் சென்று செலுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் நாளில் 50 ஆயிரம் சிறுவர்களுக்கு இந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் 12-14 வயது பிரிவில் 21.21 லட்சம் சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தி இத்திட்டத்தை நிறைவு பெற செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதேபோல் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் நேற்று தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஒரு கோடி முதியவர்கள் இருப்பதாக சுகாதாரத்துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள சுமார் 40 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று 12 வயது நிரம்பிய மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அந்தந்த பள்ளி நிர்வாகங்களோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 10 நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இத்திட்டத்தை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

    முதல் நாளில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வருகிற நாட்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேற்று மொத்தம் 93 ஆயிரத்து 317 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 12 முதல் 14 வயது சிறுவர் பிரிவில் மட்டும் 49,760 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 9 கோடியே 88 லட்சத்து 98 ஆயிரத்து 312 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×