என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நாட்டு வெடியை வீசி கொன்று விடுவேன்- போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    நாட்டு வெடியை வீசி கொன்று விடுவேன் என்று போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சலீம் புதுவடவள்ளி சமத்துவபுரம் பகுதியில் ரோந்து பணி சென்றார். அப்போது சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார்.

    போலீசாரை பார்த்ததும் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால் அவர் அதற்குள் வனப்பகுதிக்குள் தப்பி தலைமறைவானார்.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் டேங் கவரில் இருந்த ஒரு பையை சோதனை செய்தனர். அதில் வனவிலங்குகளை வேட்டையாடும் 7 அவுட்காய்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் அவுட் காயை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் தப்பி ஓடியது புதுவடவள்ளி சமத்துவபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் ஜெயபாலன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கடம்பூர் இருட்டி பாளையம், எக்கத்தூர், பசுவனாபுரம் ஆகிய இடங்களில் ரோந்து சென்றனர்.

    அப்போது அனக்கரை என்ற பகுதியில் போலீசார் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ரெங்கன் என்பவரது மகன் முருகேசன் (29) என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்.

    இதையடுத்து போலீசார் அவரை விரட்டினர். அப்போது முருகேசன் அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவேன் என்று போலீசாரை பார்த்து மிரட்டி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது அவர் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை விரட்டவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும் அவுட்காய்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×