என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    10, 12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம்- பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை தொடங்கியது

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார்.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இப்போது நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி இந்த தேர்வு தொடங்கியது. 10-ந்தேதி விடுமுறை. 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வு நடந்தது. இன்று (14-ந்தேதி) 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வும், பிளஸ்2-க்கு கணிதத் தேர்வும் நடக்கிறது.

    இந்நிலையில் இதற்கான வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி விட்டதாக நேற்று இரவு தகவல் பரவியது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்திலும் இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் கூறியதாவது:-

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நடத்தப்படும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் எல்லாம் அந்தந்த மாவட்டங்களில் அச்சடிக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 532 பள்ளிகளுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த தேர்வுகள் எல்லாம் வழக்கமாக நடத்தப்படுவதுதான். அரசு பொதுத்தேர்வு போன்றதல்ல.

    அதேநேரம் தனியார் பள்ளியை சேர்ந்த யாரோ ஒருவர்தான் இந்த வினாத்தாள்களை வெளியிட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தவறு செய்த நபர்கள் யார் யார்? என்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். ஆனாலும் இன்று நடைபெற வேண்டிய தேர்வுகள் நிறுத்தப்படாமல் வழக்கம்போல் நடைபெற்றன. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதினர்.

    Next Story
    ×