search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பண்ணை வீட்டில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு செய்தார்.
    X
    பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பண்ணை வீட்டில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு செய்தார்.

    அ.தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் அடுத்த முத்துகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சந்தர்ராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    இவரது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இவருக்கு சொந்தமான தோட்டம் மற்றும் பண்ணை வீடு உள்ளது. தோட்டத்தை சுற்றி கம்பி வேலி மற்றும் சுற்று சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் நுழைவு வாயில் பகுதியில் இரும்பு கதவு போடப்பட்டு உள்ளது.

    சுந்தர்ராஜன் தனது வீட்டில் இருந்து தினமும் பண்ணை வீட்டுக்கு சென்று அங்கு தோட்ட வேலைகளை கவனித்து வந்தார். பின்னர் அவர் இரவில் வீட்டுக்கு வந்து விடுவார். இந்த பண்ணை வீட்டில் ஆறுமுகம் என்பவர் தங்கி தோட்ட வேலைகளை கவனித்து வருகிறார்.

    ஆறுமுகம் இரவில் பண்ணை வீட்டின் முன் பகுதியில் படுத்து கொள்வார். வழக்கம் போல் ஆறுமுகம் இரவில் சாப்பிட்டு விட்டு பண்ணை வீட்டின் முன்பு தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் அதிகாலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு ஆறுமுகம் எழுந்து பார்த்தார். அப்போது பண்ணை வீட்டில் உள்ள கதிர் அடிக்கும் களம் மற்றும் தோட்டத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட இரும்பு கதவு பகுதி தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து சுந்தர்ராஜனுக்கு தகவல் கொடுத்தார். மேலும் இது குறித்து சிவகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தோட்டத்துக்கு வந்த மர்ம நபர்கள் தோட்டத்தில் உள்ள இரும்பு கதவு மற்றும் கதிர் அடிக்கும் களம் ஆகியவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி யதும், தூங்கி கொண்டு இருந்த ஆறுமுகம் வருவதற்குள் அவர்கள் தப்பி சென்றதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் பவானி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆறுமுகத்தினர் விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து துப்பு துலக்க பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் முதல்கட்ட விசாரணையில் பண்ணை வீட்டில் பொருத்தியிருந்த கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமிராக்கள் செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
    Next Story
    ×