search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி?- அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    கொரோனா ஊரடங்கை 15-ந் தேதியில் இருந்து நீட்டிக்கும்போது என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென ஒமைக்ரான் தொற்று பரவல் அதிக ரித்தது.

    இதன் காரணமாக ஜனவரி 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஜனவரி 9-ந்தேதி முதல் ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்த வண்ணம் இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஜனவரி 16 மற்றும் 23-ந்தேதிகளில் நீட்டிக்கப்பட்டது.

    திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றும் இறப்பு, துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் முக்கிய அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் உரிய அடையாள அட்டையை காண்பித்து செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.

    அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

    வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டது.

    தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவதால் கொரோனா பரவுவது இன்னும் அதிகரிக்கும் என பலர் அச்சப்பட்டு வந்தனர். இதன் காரணமாக தேர்தல் பிரசாரத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    முதலில் 3 பேருக்கு மேல் ஒன்று சேர்ந்து சென்று ஓட்டு கேட்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 20 பேர் வரை சென்று வீடு வீடாக ஓட்டு கேட்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இதேபோல் பொது அரங்கத்தில் 50 சதவீதம் என்ற அளவில் ஆட்களை அமர வைத்து பிரசாரம் செய்யலாம் என்று அறிவித்தனர். ஆனாலும் இன்னும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை.

    இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தினமும் 3,200-க் கும் குறைவான பேருக்கு தான் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது.

    இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும் வாகன பேரணி, ஊர்வலங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.

    ஆனாலும் வருகிற (பிப்ரவரி) 15-ந்தேதி வரை 16 வகையான தடை இன்னும் நீடித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கை 15-ந் தேதியில் இருந்து நீட்டிக்கும் போது என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பதை முடிவு செய்ய முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    தலைமைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், பேரிடர் மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள், போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு என்னென்ன தளர்வுகளை கூடுதலாக அறிவிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

    தற்போது மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்படவும், அரசு, தனியார் கலை விழாக்கள், பொருட்காட்சிகள் நடத்தவும் தடை உள்ளதால் இதை விலக்கிக்கொள்ள அறிவிப்பு வெளியிடலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

    உணவகங்கள், விடுதிகள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இதிலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

    வருகிற 15-ந் தேதியுடன் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதால் அது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தற்போது தேர்தல் பிரசார சமயமாக உள்ளதால் அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாமா? என்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எனவே இன்று மாலையில் இது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுபற்றி அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இனியும் அதிக கட்டுப்பாடுகள் இருந்தால் சரிபடாது. மக்களின் பொருளாதார வாழ்வாதார பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்.

    அது என்னென்ன தளர்வுகள் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    Next Story
    ×