search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ கொடுக்கும் பணி இன்று தொடங்கியது

    சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 5,539 பாகங்கள் உள்ளன. பாகங்கள் வாரியாக பூத் சிலிப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தேர்தலை சுமூகமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 61 லட்சத்து 73 ஆயிரத்து 112 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 30 லட்சத்து 49 ஆயிரத்து 529 பேரும், பெண்கள் 31 லட்சத்து 21 ஆயிரத்து 954 பேரும் உள்ளனர். 3-ம் பாலித்தவர் 1,629 பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது.

    கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் கூடுதலாக வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் 5,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 17-ந்தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

     

    கோப்பு படம்

    இந்த தேர்தலில் மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன. எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம், பெயர்கள் பொருத்தும் பணி இன்று நடைபெறுகிறது.

    வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டு கொடுக்கும் பணியில் கடந்த கால தேர்தல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். அரசியல் கட்சிகள் இந்த பணியை செய்து வந்த நிலையில் அதில் பல்வேறு தவறுகள் ஏற்பட்டதால் அந்த முறை முற்றிலுமாக நீக்கப்பட்டது.

    சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் பூத் சிலிப் கொடுக்கும் பணி இன்று முதல் தீவிரம் அடைந்துள்ளது. இந்த பணியில் 3 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பூத் சிலிப்புகள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று கொடுக்கப்படுகிறது. இந்த பணி திங்கட்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த பூத் சிலிப்பில் வாக்காளர்களின் பெயர், புகைப்படம், வாக்குப்பதிவு செய்யும் இடம், பாகம் எண் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதனை மாநகராட்சி ஊழியர்கள் வாக்காளர்களிடம் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கையெழுத்து பெறப்படுகிறது.

    சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 5,539 பாகங்கள் உள்ளன. பாகங்கள் வாரியாக பூத் சிலிப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

    வீடு வீடாக மாநகராட்சி ஊழியர்கள் சென்று பூத் சிலிப்பை வழங்கும்போது வீடுகளில் ஆட்கள் இல்லாமலோ அல்லது கதவு மூடப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கு வாக்குப்பதிவு நாள் அன்று பூத் சிலிப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக ஊழியர்கள் முகாமிட்டு பூத் சிலிப்பை வழங்குவார்கள். பூத் சிலிப்பு பெறாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    அவர் மேலும் கூறும் போது, “பூத் சிலிப் கொடுக்கும் பணி நாளை நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். நேற்று 3,135 பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு உள்ளது. முதல் நாள் இந்த பணி 2-வது மண்டலத்தில் மட்டுமே தொடங்கி உள்ளது.

    இன்றும், நாளையும் முழு அளவில் பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும். பொதுமக்கள் பூத் சிலிப்பை பெற்று சிரமம் இல்லாமல் அவரவர்களுக்குரிய வாக்குச் சாவடிகளில் வாக்குரிமையை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    இதையும் படியுங்கள்... ஊரடங்கு தளர்வுகள்- சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

    Next Story
    ×