search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது: அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்

    ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியபோது கொடுத்த விளக்க கடிதத்தை வெளிப்படையாக ஊடகத்தில் வெளியிடுமாறு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

    இந்த விஷயத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்வதற்காக நாளை காலை 11-00 மணி அளவில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

    ஆனால், இந்த கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளுடன் கடிதம் எழுதி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-

    மக்கள் நலனுக்காக தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், தமிழக மக்களுக்கும், நம் தமிழ் மாநிலத்தின் அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும், பாஜக என்றும் தயாராக இருக்கிறது. ஆனால், தாங்கள் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தேவை மற்றும் அவசியம் குறித்த எங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.

    நீட் தேர்வு

    ஏற்கனவே நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இனி மறுபடி சட்டமன்றம் மாநில ஆளுநருக்கு மசோதாவை அனுப்பும். அவர் அதை குடியரசு தலைவருக்கு அனுப்புவார். மீண்டும் அது திரும்பி வரும் என்று நன்றாகத் தெரிந்தும், அதை வைத்து அரசியல் செய்யலாம் என்ற தப்புக் கணக்கில் இருக்கின்றீர்களா?

    ஏற்கனவே குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒரு சட்ட முன்வடிவை மீண்டும் அனுப்புவதால் தாங்கள் என்ன சாதிக்க  நினைக்கிறீர்கள்? அல்லது மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து, ஏதாவது செய்து, அரைத்த மாவை அரைத்து தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள நினைக்கிறீர்களா? தயவு செய்து மாணவர்களின் வாழ்க்கையோடும், அவர்களின் உயிரோடும் விளையாடி அரசியல் செய்ய நினைக்காதீர்கள். அதை பாஜக அனுமதிக்காது.

    தயவு செய்து ஆளுநர் தங்களுக்கு சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியபோது கொடுத்த விளக்க கடிதத்தை வெளிப்படையாக ஊடகத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறேன். ஆளுநரின் கடிதத்தை வெளியிட தாங்கள் அச்சப்பட காரணம் என்ன? ஆட்சியின் அறியாமையை அதில் அப்பட்டமாக சாடியிருக்கிறாரா? ஆளுநரின் கடிதத்தை வெளியிடாமல் அவசர அவசரமாக தாங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் என்ன பயன்?

    மக்கள் நலனுக்காக தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் பிரச்சனைகளுக்கு நாங்கள் துணை நிற்க மாட்டோம். ஆகவே நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் நாங்கள் விலகிக்கொள்கிறோம்.

    இவ்வாறு அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×