search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த கூட்டம்.
    X
    நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த கூட்டம்.

    நாளை பொங்கல் பண்டிகை- நெல்லை மார்க்கெட், பஜார்களில் அலைமோதிய கூட்டம்

    நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், பஜார்களில் பொருட்கள் வாங்குவதற்காக இன்று கூட்டம் அலைமோதியது.
    நெல்லை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிகிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சாதி, மதங்களை கடந்து பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கலாகவும் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். 

    சீவலப்பேரி ரோட்டில் விற்பனைக்கு வந்த கரும்பு கட்டுகள்.

    வீடுகள் முன்பு கரும்பு, மஞ்சள் குலைகள் வைத்து சூரியனை நோக்கி பொங்கல் பானைகளை வைத்து வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வைத்து அதிகாலையிலேயே கொண்டாடுவது வழக்கம். 

    அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு பொங்கல் கொண்டாடுவது, கிராமத்து மகிழ்ச்சி.

    வழக்கமாக பொங்கல் பண்டிகை நகரத்தை விட கிராமத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக வெளியூர், வெளிநாடுகளில் வேலை பார்த்து வருபவர்களும் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை எடுத்து சொந்த கிராமம் திரும்புவார்கள். 

    சந்திப்பு பூ மார்க்கெட்டில் பூ வியாபாரம் நடைபெறும் காட்சி.

    இந்த ஆண்டும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானோர் கிராமங்களுக்கு வந்துள்ளனர். 

    சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள ஏராளமானவர்களும் புறப்பட்டு இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் சொந்த ஊர்களிலும் குவிந்தனர். 

    இதனால் வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்த அனைத்து பஸ்களிலும் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமானவர்கள் சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு வந்தனர்.

    மஞ்சள் குலையை தேர்வு செய்யும் பொதுமக்கள். (இடம்: பாளை மார்க்கெட்).

    இதனால் இன்று காலை தென் மாவட்ட சாலைகளில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கியது. 

    நெல்லை, பாளை, வள்ளியூர், அம்பை, திசையன்விளை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், சாத்தான்குளம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பஜார்கள் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் இன்று மிகவும் அதிகமாக கூடியது. 

    ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொங்கல் படி பொருட்களை வாங் கினார்கள். மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விற்பனையும் இன்று அதிகமாக நடந்தது.

    பொங்கல் பண்டிகைக்காக மகாராஜா நகர் உழவர் சந்தைக்கு இன்று 75 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதுபோல அம்பை, கண்டியப்பேரி, மேலப்பாளையம் உழவர் சந்தைகளுக்கும் காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளது. 

    இந்த நான்கு உழவர் சந்தைகளில் மட்டும் இன்று சுமார் 150 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நெல்லை, பாளை பகுதியில் உள்ள அனைத்து காய்கறி மார்க்கெட்களிலும் கடும் கூட்டம் அலைமோதியது.

    பனங்கிழங்கு வியாபாரம் நடைபெற்ற காட்சி. (இடம்: பாளை மார்க்கெட்).

    தூத்துக்குடி, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று வழக்கத்தை விட காய்கறிகள் விலை மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. 

    பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ எடை உள்ள தக்காளி ரூ.50, கத்தரிக்காய் ரூ.100, மிளகாய் ரூ.80, கோஸ் ரூ.70, கேரட், ரூ.120, அவரை ரூ.100, பீன்ஸ் ரூ.100, சவ்ச்சவ் ரூ.40, புடலை ரூ.60, சீனி அவரைக்காய் ரூ.40, கிழங்கு வகைகளான சேனை ரூ.30, கருணை ரூ.60, சிறுகிழங்கு ரூ.80, வள்ளி கிழங்கு மற்றும் பிடி கிழங்கு வகைகள்ரூ.100 அதிக அளவில் விற்கப்பட்டது. உழவர் சந்தை விலைகளை ஒப்பிடும்போது இந்த விலை மிகவும் அதிகமாக இருந்ததாக பொதுமக்கள் கூறினார்கள்.

    ஆனாலும் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். கதம்ப காய்கறிகள் ஒரு கிலோ ரூ 150 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை பகுதிக்கு இன்று அம்பை, பாபநாசம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் விற்பனைக்கு வந்தன.இந்த கரும்புகள் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. 10 கரும்புகள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தேனியில் இருந்து கொண்டு வரப்பட்ட உயர்ரக கரும்பு 10 உள்ள ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. 

    மஞ்சள் குலை ரூ 25 வரை விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் விடுவதற்காக பனை ஓலை ஒன்று ரூ.20 முதல் ரூ. 25 வரை விற்பனை செய்யப்பட்டது. பனங்கிழங்கு 25 கொண்ட கட்டு ரூ.100 முதல் ரூ. 125 வரை விற்பனை செய்யப்பட்டன.

    கிராமப்பகுதிகளில் உள்ள சில்லறை கடைகளில் காய்கறிகள் விலை இதை விட விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. கிராமப்பகுதி மார்க்கெட்டுகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பொங்கல் பூ என்ற பழமையான பூக்களும் விற்பனை செய்யப்பட்டன. 

    பொங்கல் பண்டிகைக்காக பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ ரூ.3000 வரையும், பிச்சிப்பூ ரூ. 2000 வரையும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் இன்று விற்பனை செய்யப்பட்டது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். 

    பாளை-திருச்செந்தூர் ரோட்டில் விற்பனைக்கு வந்துள்ள பொங்கல் பானைக்கு வர்ணம் தீட்டும் வியாபாரி.

    சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி போலீசாரும், உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முகக்கவசம் அணியா தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். நெடுஞ்சாலைகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×