search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை கதிர்காமம் ரேஷன் கடையில் முதலமைச்சர் ரங்கசாமி பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார்
    X
    புதுவை கதிர்காமம் ரேஷன் கடையில் முதலமைச்சர் ரங்கசாமி பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார்

    அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு- ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    புதுவையில் அனைத்து ரேஷன்கார்களுக்கும் தலா ரூ.490 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் ஆண்டுதோறும் 6 வகையான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.490 மதிப்பிலான 10 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க முடிவு செய்தது.

    அதாவது 100 கிராம் மஞ்சள் பொடி, 2 கிலோ பச்சரிசி, துவரம் பருப்பு, வெல்லம் ஆகியன தலா 1 கிலோ, முந்திரி பருப்பு, திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், உளுந்து, கடலை பருப்பு, பாசிபருப்பு தலா 500 கிராம் என 10 வகையான பொருட்கள் ஒரே பையில் வைத்து வழங்கப்படுகிறது.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள ரேஷன்கடையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், குடிமை பொருள் வழங்கல் துறை செயலாளர் உதய குமார், கூட்டுறவு சிறப்பு செயலாளர் மலர்க்கண்ணன், குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    எங்கள் அரசு, அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. முதியோர், மழை நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரேஷன் கடைகளில் இன்று (திங்கட் கிழமை) முதல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் புதுவையில் உள்ள சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
    Next Story
    ×