search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    நகைக்கடை கொள்ளையில் பெங்களூரு கொள்ளையனுக்கு தொடர்பு?

    நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் சுவரில் துளையிட்டு சுமார் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து இரவு வரை கணக்கெடுக்கப்பட்டது. மேலும் வேலூர் மாநகர் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. மாநகர எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வேலூரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஸ்பிரே மூலம் அடித்து மறைத்துள்ளனர்.

    நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன் அங்கு தொங்க விடப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை மட்டும் குறிவைத்து எடுத்துள்ளான்.

    இந்த சம்பவத்தில் லாக்கரில் இருந்த சுமார் 70 கிலோ தங்கம், வைர நகைகள் தப்பியுள்ளது.

    வடமாநில கொள்ளையர்கள் புகுந்தால் எந்த நகையையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

    மொத்தத்தையும் அள்ளிச்சென்று விடுவார்கள். இந்த சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்காது என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘பிரபல தங்க நகைக்கடையின் மொத்த தங்கம், வைர நகைகள் இருப்பு 90 கிலோ. இதில், 70 கிலோ அளவுக்கு லாக்கரில் வைத்து நேற்று முன்தினம் இரவு பூட்டியுள்ளனர். மீதமிருந்த 20 கிலோ தங்க நகைகள் ஷோகேஸ்களில் அப்படியே விட்டுள்ளனர்.

    நள்ளிரவில் கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளையிட்டு பின்னர் ஏ.சி. துளையின் வழியாக உள்ளே புகுந்த ஒரு மர்ம நபர், தரைத்தள ஷோகேஸ் பகுதிக்கும் பக்கவாட்டு சுவருக்கும் இடையில் இருந்த 1 அடி அகலம் இடைவெளியில் நுழைந்துள்ளார்.

    அங்கிருந்து தரைத்தளத்தின் பால் சீலிங் பகுதிக்கு சென்றவர், அந்த பால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்துள்ளார்.

    பின்னர், ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகளை மட்டும் கொள்ளையடித்து தப்பியுள்ளார். லாக்கரை உடைக்காததால் அதிலிருந்த 70 கிலோ தங்கம், வைர நகைகள் தப்பியுள்ளது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடைக்குள் கொள்ளையன் ஒருவர் மட்டுமே புகுந்துள்ளார். அவருக்கு உடந்தையாக வந்த கொள்ளை கும்பல்கள் வெளியில் நின்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    நள்ளிரவு 1 மணி அளவில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து அவர் ரெயில் மூலம் பெங்களூரு சென்றிருக்கலாம். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற 3 ரெயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற நள்ளிரவு 1 மணியில் இருந்து 2 மணிக்குள் எத்தனை வாகனங்கள் தோட்டப்பாளையம் சாலையில் கடந்துள்ளது என்ற விவரங்களையும் சேகரித்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    மேலும் சந்தேகப்படும்படியான பெங்களூரு கொள்ளையனையும் அவருக்கு உடந்தையாக இருந்த கும்பலை பிடிக்கவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×