search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    இதுவரை 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

    புதுச்சேரியை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தவும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி குண்டுபாளையம் ஆருத்ரா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் இதுவரை 10 லட்சம் பேருக்கு (70 சதவீதம்) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதற்காக சுகாதாரத் துறையை பாராட்டுகிறேன். புதுச்சேரியை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசிக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே 3-வது அலையைத் தடுக்கும் ஆயுதம். எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×